"ராஜபாளையம் பகுதியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்'

ராஜபாளையம் பகுதியில் அரசு சார்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம்

ராஜபாளையம் பகுதியில் அரசு சார்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆட்சியர் அ.சிவஞானம் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.உதயகுமார், வேளாண் அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
 அப்போது விவசாயிகள் பேசியதாவது: கூட்டுறவு கடன் சங்கங்களில் இ- அடங்கல் மூலம் பயிர் கடன் பெற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதில், பல்வேறு நடைமுறை சிக்கல் உள்ளது. எனவே எழுத்துப் பூர்வமாக கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் வழங்க வேண்டும். தற்போது பருவமழை தொடங்கியுள்ளதால், சிஆர் 1009 விதை நெல் பயிரிட்டால் ஏக்கருக்கு 55 மூட்டைகள் வரை மகசூல் கிடைக்கும். தருமபுரி பகுதியில் கிடைக்கும் இந்த விதை நெல்லை வேளாண் அலுவலர்கள் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பல்வேறு வங்கிகளில் விவசாய கடன் தர மறுத்து வருகின்றனர். குறிப்பாக அக்டோபர் மாதம் முதல் கடன் வழங்கப்படாது என கூறி வருகின்றனர். இதனால், விவசாய கடன் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி பகுதியில் கடலை விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள காட்டுப்பன்றிகள், விவசாயப் பயிர்களை அழித்து வருகின்றன. இதனால், விவசாயிகள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே, காட்டுப்பன்றிகளை பிடித்து மலைப்பகுதிக்கு கொண்டு செல்லவோ அல்லது சுட்டுப்பிடிக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 வாடியூரில் குடிமராமத்து பணி மூலம் குளத்தை தூர்வார வேண்டும். இது குறித்து ஊராட்சி துறை அலுவலர்களிடம் கூறினால், எங்களை படம் வரைந்து கொண்டு வருமாறு கூறுகிறார்கள். நான், படிக்காதவன் என்னால் எப்படி படம் வரைந்து தர முடியும். ராஜபாளையம் பகுதியில் 20 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள கொப்பரை தேங்காய்களை அரசு சார்பில் கொள்முதல் செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். திண்டுக்கல், வேலூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசு சார்பில் கொப்பரை தேங்காய் கிலோ ரூ. 95 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், ராஜபாளையம் பகுதியில் அரசு கொள்முதல் நிலையம் இல்லாததால், வியாபாரிகள் கிலோ ரூ.65 வரை கொள்முதல் செய்கின்றனர். ஆனால், அதற்கான பணத்தை தராமல் காலம் தாழ்த்துகின்றனர். எனவே ராஜபாளையம் பகுதியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். 
வாசுதேவநல்லூர் சர்க்கரை ஆலைக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்த விலை டன் ரூ. 2,650 அடிப்படையில் ஒரு லட்சம் டன் வரை விவசாயிகள் கரும்பு விநியோகம் செய்துள்ளனர். இதற்கான குறைந்தபட்ச தொகையை கூட ஆலை நிர்வாகம் வழங்கவில்லை. கரும்பு கட்டுப்பாடு சட்டத்தின்படி கரும்பு சப்ளை செய்த 15 நாள்களுக்குள் விவசாயிகளுக்கு பணம் வழங்க வேண்டும். இல்லையெனில் 15 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும். ஆனால், பல மாதங்கள் கடந்தும் கரும்புக்கு பணத்தை ஆலை நிர்வாகம் தரமறுத்து வருகிறது. விவசாயிகள் வாழ்வாதரத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முத்தரப்பு கூட்டம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மம்சாபுரம் ஊருணியில் தனி நபர் ஆக்கிரமிப்பு காரணமாக, கடந்த 13 ஆண்டுகளாக 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாவாலி கண்மாய் பகுதியில் தினமும் 100 வாகனங்களில் மண் அள்ளப்படுவதால் தண்ணீர் நிரம்பவில்லை என்றனர்.
இதை தொடர்ந்து ஆட்சியர் மற்றும் அலுவலர்கள் பேசியதாவது: பயிர் கடன் பெற இ- அடங்கல் மூலம் விண்ணப்பம் செய்வது விவசாயிகளுக்கு எளிய முறை. ஏனென்றால், விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோரை தேடி அலைய வேண்டாம். அதில், சிறு சிறு பிரச்னைகள் இருந்தால், கையால் சான்றிதழ் தர நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படும். சிஆர் 1009 நெல் விலை 150 நாள்கள் விளைச்சல் உள்ள பயிராகும். எந்த விவசாயிக்கு என்ன விதை நெல் வேண்டும் என பெயர் பட்டியல் அளித்தால், அந்த விதை நெல் வாங்கித் தரப்படும். வாடியூர் குளத்தை தூர்வார உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்படும். விவசாய பயிர்களை சேதப் படுத்தும் காட்டுப்பன்றிகளை பிடிப்பது குறித்து அடுத்த வாரம் வனத்துறை சார்பில் கூட்டம் நடத்தப்படும். மம்சாபுரம் ஊருணி ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்டவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com