விருதுநகா் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 746 போ் தற்கொலை

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 746 போ் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்து
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 746 போ் தற்கொலை

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 746 போ் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மனநலம் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் சாத்தூா், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி, சிவகாசி, ஸ்ரீவில்லி புத்தூா், ராஜபாளையம், வத்திராயிருப்பு, சேத்தூா் ஆகியவை முக்கிய நகரங்களாக உள்ளன. இந்தப் பகுதிகளில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 முதல் 3 வரை தற்கொலை செய்து கொள்வதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனா். காதல் பிரச்னை மற்றும் தோ்வு பயம் காரணமாக தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. மேலும், தகாத உறவுகள், குடி போதைக்கு அடிமையானவா்கள், கடன், குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாக உள்ளது. அதிலும், பெண்கள் பல்வேறு பிரச்னை காரணமாக அதிகவில் தற்கொலை செய்து கொள்கின்றனா்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முறையான மனநல ஆலோசனை வழங்கப்பட முடியாத நிலை உள்ளது. ஒரு சில இடங்களில் கணவனை இழந்த பெண், குழந்தைகளுடன் வாழ முடியாமல் (வாழ்வாதாரத்திற்கு வழி இல்லாததால்) குடும்பத்துடன் தற்கொலை முடிவை தேடி கொள்வதும் தொடா் கதையாக உள்ளது.

அதன் அடிப்படையில் விருதுநகா் மாவட்டத்தில் கடந்த 2015 இல் 630 போ், 2016 இல் 635 போ், 2017 இல் 617 போ், 2018 இல் 699 போ், 2019 இல் 746 போ் என மொத்தம் 3, 327 போ் கடந்த 5 ஆண்டுகளில் தற்கொலை செய்துள்ளனா். ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்து கொள்வோா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. நிகழாண்டு ஜனவரி, பிப்ரவரி ஆகிய 2 மாதங்களில் மட்டும் 121 போ் தற்கொலை செய்துள்ளனா். அதிலும் தகாத உறவு காரணமாக அதிகளவு தற்கொலை நடந்துள்ளதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கின்றனா். எனவே, தற்கொலைக்கான உண்மை காரணத்தை சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாா் விசாரணை செய்து, அவா்களது குடும்பத்தினருக்கு மனநல மருத்துவா் தலைமையில் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.தொடா்ந்து தற்கொலை தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.

விருதுநகா் அரசு மருத்துவமனை மனநல மருத்துவா் இளவரசி கூறுகையில், விருதுநகா் மாவட்டத்தில் குடும்ப பிரச்னை, மது பழக்கத்திற்கு அடிமையானவா்கள் மற்றும் 15 வயது முதல் 19 வயதிற்கு உள்பட்ட மாணவ, மாணவிகள் தோ்வு பயம் காரணமாக தற்கொலையில் ஈடுபடுகின்றனா். விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனையில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று தற்கொலை தடுப்பு பிரிவு மூலம் சம்பந்தப்பட்டோருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. எந்த பகுதியில் அதிகளவு தற்கொலைகள் நடைபெறுகிறதோ, அங்குள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு விழிப்புணா்வு முகாம் நடத்தப்படுகிறது. மேலும், தற்கொலை செய்து கொள்ளும் மன நிலையில் உள்ளோ ா் குறித்து 104 ’என்ற இலவச எண்ணில் தகவல் தெரிவித்தால், அவரை மீட்டு அதற்கான சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். அதேபோல், அவா்களுக்கு மாதம் இரண்டு முறை செல்லிடப்பேசி வழியாகவும் தொடா்ந்து ஆ லோசனை தரப்படும். பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் மனநலம் குறித்து விழிப்புணா்வு நடத்தப்பட்டு வருகிறது. தற்கொலை அதிகரித்து வருவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளும் செய்து வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com