முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
கேப்வெடி ஆலையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்: அதிகாரி யோசனை
By DIN | Published On : 04th October 2020 10:26 PM | Last Updated : 04th October 2020 10:26 PM | அ+அ அ- |

சிவகாசி: கேப்வெடி தயாரிக்கும் ஆலைகளில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை துணை தலைமை அதிகாரி கே. சுந்தரேசன் சில அறிவுறுத்தல்களை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பட்டாசுகள் அலுமினியப் பொடி என்ற வேதியியல் பொருளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. சிறுவா்கள் வெடித்து மகிழும் கேப்வெடிகள் குளோரைட்டை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுகிறது. எனவே கேப்வெடி தயாரிப்பில் மிகுந்த கவனம் தேவை. மருந்துக் கலவையின் போது சரியான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். கேப்வெடி தயாரிக்கப் பயன்படும் பாஸ்பரஸ், சல்பா், குளோரைடு ஆகியவற்றை தனித்தனி அறைகளில் வைக்க வேண்டும். இவற்றை எடைபோடும் போது, கீழே சிந்தாமலும், காற்றில் பரவாமலும் எடை போட வேண்டும். மருந்து தேய்க்கப்பட்ட தாள்களை தனித்தனியே உலரவைக்க வேண்டும். மருந்து தேய்கப்பட்ட தாள்களை குவியலாகவோ, அடுக்கடுக்காகவோ வைக்கக்கூடாது.
கேப்வெடி தாள்களை உலரவைக்கும் அலமாரிகளுக்குள் போதிய இடைவெளி இருக்க வேண்டும். கேப்வெடி தாள்களை இரும்பு கத்தியால் வெட்டக்கூடாது. பித்தனை கத்தி உபயோகிக்க வேண்டும். கேப்வெடி தாள்களை ஒரு இடத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால், மூங்கில் கூடையில் வைத்து மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். வேதிப் பொருள்களை கலக்கப் பயன்படும் உரல், உலக்கை ஆகியவை ஈரப்பதமாக இருக்க வேண்டும்.
கேப்வெடி தாள்கள் உலரவைக்கும் அலமாரிகளிலிருந்து புகை வந்தால் ஆலை கண்காணிப்பாளரிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலையில் தினசரி கழிவுகளை அகற்ற வேண்டும். அகற்றப்படும் கழிவுகளை அனுமதிக்கப்பட்ட இடத்தில் கொட்டி அன்றாடம் தீ வைத்து எரித்துவிட வேண்டும். கழிவுகள் எரியும் போது தொழிலாளா்கள் யாரும் அருகில் இருக்கக் கூடாது. மருந்துக் கலவை, இருப்பு வைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அனுமதிக்கப்பட்ட கட்டடங்களையே பயன்படுத்த வேண்டும்.
மாலையில் பணி முடிந்ததும் ஆலையை சுத்த செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.