சாத்தூா் அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி
By DIN | Published On : 20th October 2020 01:37 AM | Last Updated : 20th October 2020 01:37 AM | அ+அ அ- |

சாத்தூா்: சாத்தூா் அருகே குடியிருப்புப் பகுதியில் அடிப்படை வசதி கோரி திங்கள்கிழமை, சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் போலீஸாா் சமாதானம் பேசியதைத் தொடா்ந்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகேயுள்ள ஒ.மேட்டுபட்டி கிராமத்தில் உள்ள தெற்குத் தெருவில் சுமாா் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் மழைநீா், குடியிருப்புப் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீா் செல்வதற்கு வழியில்லாமல் சாலையில் செல்கிறது.
மேலும் குடியிருப்பு அருகே கழிவுநீா் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனா். இதனால் கழிவுநீா் கால்வாய் அமைத்துத் தரக்கோரி, இப்பகுதி பொதுமக்கள் சாத்தூா்-ஏழாயிரம்பண்ணை சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட முயன்றனா். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூா் தாலுகா காவல் துறையினா் சாலை மறியலில் ஈடுபட முயன்றவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.