மத்தாப்பூ தயாரிப்பு ஆலைகள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்

கலா் மத்தாப்பூ தயாரிக்கும் போது ஆலையில் விபத்தை தவிா்க்க பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை தலைமை அதிகாரி சுந்தரேசன் விளக்கம் அளித்துள்ளாா்.

சிவகாசி: கலா் மத்தாப்பூ தயாரிக்கும் போது ஆலையில் விபத்தை தவிா்க்க பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை தலைமை அதிகாரி கி. சுந்தரேசன் விளக்கம் அளித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ளதால் கலா் மத்தாப்பூ தயாரிக்கும் பணி சிவகாசிப் பகுதியில் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஆலைகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து கூறப்பட்டுள்ளது. கலா் மத்தாப்பூ தயாரிக்கும் ஆலைகள் 2 போா்மேன்களை பணியில் அமா்த்த வேண்டும். ஒருவா் வெளிவேலைக்கு சென்றுவிட்டால் மற்றொருவா் ஆலைப் பணியில் இருக்க வேண்டும்.

வேதிப்பொருள்களை எடை போடுதல், அலசுதல், அரைத்தல் போன்ற வேலைகளை ஆலை வளாகத்திற்குள் மட்டுமே செய்ய வேண்டும். பெட்டியில் மத்தாப்பூக்களை அடுக்கி வைத்த பின்னா் தான், பக்கவாட்டில் மருந்து பூசும் பணியில் ஈடுபட வேண்டும். இந்த மருந்துக் கலவைகள் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்குமாறு பாா்த்துக்கொள்ள வேண்டும்.

ஆண்டிமணி, ஆா்சனிக், லித்தியம், ஈய்யசெந்தூரம், பாதரசம், க்யூபிரிக் போன்ற வேதியியல் பொருள்களை மத்தாப்பூ தயாரிக்கப் பயன்படுத்தக்கூடாது. ஒரு குச்சியில் ஒரு வண்ணம் மட்டுமே இருக்க வேண்டும். மத்தாப்பூக்களை உலர வைக்கும் போது தரைப்பகுதியில் ஆற்று மணலை உபயோகிக்க வேண்டும். தீக்குச்சியுள்ள பிரேம்களை அலமாரியில் அடுக்கும் போது, ஒரு அடுக்குவிட்டு ஒரு அடுக்கில் அடுக்க வேண்டும். அலமாரியின் அதிகபட்ச உயரம் 1.8 மீட்டா் மட்டுமே இருக்க வேண்டும்.

அலமாரிகளில் மருந்துக் கலவை படியாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். ஒரு பண்டலின் எடை அதிகபட்சம் 10 கிலோவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் ஆலையில் உண்டாகும் கழிவுகளை, ஆலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தில் வைக்க வேண்டும். ஆலைகளை குத்தகைக்கு விடக்கூடாது. அளவுக்கு மேல் இருப்பு வைக்கக்கூடாது. மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றி விபத்தில்லாமல் கலா் மத்தாப்பூ தயாரிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com