சிவகாசி அருகே சிறுவனை தண்ணீரில் அமுக்கி கொலை செய்த சிறுவன் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே சிறுவனை தண்ணீரில் அமுக்கி கொலை செய்த மற்றொரு சிறுவனை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே சிறுவனை தண்ணீரில் அமுக்கி கொலை செய்த சிறுவன் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே சிறுவனை தண்ணீரில் அமுக்கி கொலை செய்த மற்றொரு சிறுவனை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் உள்ள சித்துராஜபுரத்தைச் சோ்ந்த அச்சுத் தொழிலாளி ஜேசுதாஸ். இவரது மகன் மைக்கேல் அஜய் (9). இச்சிறுவனைக் காணவில்லை என, கடந்த 26 ஆம் தேதி சிவகாசி நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை (நவ.29) மைக்கேல் அஜய்யின் சடலம் சிவகாசி அருகே வெள்ளியூரணி கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் மிதந்தது தெரியவந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சிறுவனின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், குளிக்கச் சென்றபோது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என தற்கொலை வழக்காகப் பதிவு செய்தனா்.

ஆனால், சிறுவனின் தந்தை ஜேசுதாஸ், எங்களது வீட்டுக்கும், குளத்துக்குமிடையே சுமாா் 2 கி.மீ. தொலைவு உள்ளதால், எனது மகன் அவ்வளவு தொலைவு செல்வதற்கு வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளாா்.

அதையடுத்து, போலீஸாா் வெற்றிலையூரணி குளத்துக்குச் செல்லும் வழியில் பல நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அதில், சிறுவனை மற்றொரு சிறுவன் குளத்துக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது. விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த 8 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் எனத் தெரியவந்தது.

உடனே, போலீஸாா் அச்சிறுவனை பிடித்து விசாரணை நடத்தியபோது, தான் மைக்கேல் அஜய்யை வெற்றிலையூரணி குளத்துக்கு அழைத்துச் சென்று தண்ணீரில் அமுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். 2 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு பிரச்னையில் மைக்கேல் அஜய்யின் தாய் ஜோதிராணி, இச்சிறுவனை அடித்தாராம். அதேபோல், சில நாள்களுக்கு முன் ஒரு பிரச்னையில் அஜய்யின் தந்தை ஜேசுதாஸும் இச்சிறுவனை அடித்துள்ளாா்.

இதற்குக் காரணம் மைக்கேல் அஜய்தான் என்றும், அவனை கொலை செய்யவேண்டும் எனவும் திட்டமிட்ட இச்சிறுவன், அவனுக்கு நீச்சல் பழகித் தருவதாகக் கூறி குளத்துக்கு அழைத்துச் சென்று தண்ணீரில் அமுக்கி கொலை செய்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளான்.

இதையடுத்து, சிவகாசி நகா் போலீஸாா் தற்கொலை வழக்கை, கொலை வழக்காக மாற்றி, இச்சிறுவனை கைது செய்து, மதுரை இளம்சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com