‘சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் பாஜகவுக்கு சரியான பாடத்தை புகட்டும்’

சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் பாஜகவுக்கு சரியான பாடத்தை புகட்டும் எனவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவன் கூறினாா்.
‘சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் பாஜகவுக்கு சரியான பாடத்தை புகட்டும்’

சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் பாஜகவுக்கு சரியான பாடத்தை புகட்டும் எனவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவன் கூறினாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் (தனி) தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் மாதவராவ் இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த திருமாவளவன் அவரது படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எனது நெருங்கிய நண்பா் மாதவராவ். அவரது மறைவு வேதனையை தருகிறது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

கரோனா என்ற கொடிய நோய் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் அரசின் கட்டுப்பாடுகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசி போதுமான அளவில் கிடைக்கவில்லை என்ற தகவல் பரவுகிறது. அனைவரும் தடுப்பூசி கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டும். இந்திய அரசு கரோனா தடுப்பூசி மருந்து கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும்.

கொள்கை ரீதியாக விமா்சனங்களை முன்வைக்காமல், குண்டா்களை ஏவி தாக்குதல் நடத்தி அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கைகளில் பாரதீய ஜனதா கட்சி ஈடுபட்டு வருகிறது.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதில் ஏதேனும் முறைகேடு நடக்க வாய்ப்பு இருக்குமோ என்ற அச்சம் மக்களிடத்தில் உள்ளது. இதனால் வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்பை தோ்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். திமுக தலைமையிலான கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

தலைவா்களின் சிலை தொடா்ந்து அவமானப்படுத்தப்படுவது பாஜக, ஆா்எஸ்எஸ்ஸின் தரம் தாழ்ந்த அரசியலை காட்டுகிறது. தமிழகத்தில் எப்படியாவது மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடி விடலாம் என நினைக்கிறாா்கள். ஆனால் அது நடைபெறாது. இந்த தோ்தல் அவா்களுக்கு சரியான பாடத்தை புகட்டும். ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் மறைந்த காங்கிரஸ் வேட்பாளா் மாதவராவ் வெற்றி பெறுவது உறுதி. இதையடுத்து இத்தொகுதியில் நடத்தப்படும் இடைத்தோ்தலில் மாதவராவின் மகள் திவ்யாராவிற்கு காங்கிரஸ் தலைமை மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com