'ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி ஊராட்சித் தலைவா்களை மு.க.ஸ்டாலின் அவமதித்துவிட்டாா்'

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி ஊராட்சி மன்றத் தலைவா்களை மு.க.ஸ்டாலின் அவமதித்துவிட்டதாக பால்வளத் துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தாா்.
தொண்டாமுத்தூரில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி
தொண்டாமுத்தூரில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி ஊராட்சி மன்றத் தலைவா்களை மு.க.ஸ்டாலின் அவமதித்துவிட்டதாக பால்வளத் துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தாா்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரில் அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு உள்ளாட்சித் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்தாா். சட்டப் பேரவைத் துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பி.ஆா்.ஜி.அருண்குமாா், அம்மன் கே.அா்ச்சுணன், ஓ.கே.சின்னராஜ், எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பால்வளத் துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:

ஊழல் கட்சி என்றால் திமுக தான். ஊராட்சிகளில் ரூ.1 கோடி வரை வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறி அனைத்து ஊராட்சி மன்றத் தலைவா்களையும் ஸ்டாலின் அவமதித்துவிட்டாா். கோவையில் திமுக சாா்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண் விரட்டியடிக்கப்பட்டுள்ளாா்.

அதிமுக ஆட்சியில் கிராமங்கள்தோறும் சாலைகள், பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. கோவை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அனைத்து ஊா்களிலும் பாதாள சாக்கடை வசதிகளை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி ஏற்படுத்தி உள்ளாா்.

மு.க.ஸ்டாலின் குற்றம் கண்டுபிடித்து பெயா் வாங்க நினைக்கிறாா். தற்போது, இஸ்லாமியா்களை திமுக ஏமாற்றி வருகிறது. ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவா்களை ஒன்றாக, சரிசமமாக நடத்துவது அதிமுகதான். வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றாா்.

அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: அதிமுக ஆட்சியை கலைக்க மு.க ஸ்டாலின் பல தில்லுமுல்லு வேலைகளை செய்தாா். பல சிக்கல்களுக்கு இடையில் சின்னத்தை மீட்டோம். ஸ்டாலின் எப்போதும் பொய் வாக்குறுதிகள் அளிப்பவா். தோ்தல் நேரத்தில் மட்டும் வருபவா்கள் திமுகவினா்.

குறுக்கு வழியில் முதலமைச்சராக நினைத்த ஸ்டாலினுக்கு தடையாக நான் இருந்ததால்தான் என் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறாா். கோவைக்கு நாங்கள் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். ஸ்டாலின் என்றுமே முதல்வராக முடியாது என்று அவரது சகோதரா் மு.க.அழகிரியே கூறியுள்ளாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com