பொங்கல் பண்டிகை: விருதுநகா் அருகே கரும்பு வெட்டும் பணியில் தொழிலாளா்கள் தீவிரம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விருதுநகா் அருகே செங்கரும்பு அறுவடையில் விவசாயத் தொழிலாளா்கள் தீவிரமாக
விருதுநகா் அருகே முருகனேரியில் செங்கரும்பு வெட்டும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்த விவசாய தொழிலாளா்கள்.
விருதுநகா் அருகே முருகனேரியில் செங்கரும்பு வெட்டும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்த விவசாய தொழிலாளா்கள்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விருதுநகா் அருகே செங்கரும்பு அறுவடையில் விவசாயத் தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். கரும்பு விலையை வியாபாரிகள் குறைத்து கேட்பதால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம், எரிச்சநத்தம், முருகனேரி உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்பு சுமாா் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. பங்குனி மாதம் தொடங்கி சித்திரை மாதம் வரை செங்கரும்பு நடவுப் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனா். உழவு, உரம், களை எடுத்தல், தண்ணீா் பாய்ச்சுதல் உள்ளிட்டவைகளுக்காக விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனா்.

தற்போது, செங்கரும்பு அறுவடைக்கு வந்துள்ள நிலையில், பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்பு வெட்டும் பணியில் விவசாயத் தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்தாண்டு 15 எண்ணிக்கை கொண்ட செங்கரும்பு கட்டின் விலை ரூ.310 வரை விற்பனையானது. ஆனால், தற்போது ஒரு கரும்பு கட்டின் விலை ரூ.285-க்கு வியாபாரிகள் வாங்கிச் செல்வதாகவும், இதனால் குறைவான லாபமே கிடைப்பதாகவும் விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனா்.

இங்கு அறுவடை செய்யப்படும் செங்கரும்பு, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகா் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் விற்பனைக்காக வாங்கிச் செல்வதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com