ரேஷனில் 13 வகை பொருள் வழங்க டோக்கன் விநியோகம்
By DIN | Published On : 02nd June 2021 11:57 PM | Last Updated : 02nd June 2021 11:57 PM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் 51,984 அரிசி குடும்ப அட்டைகளுக்கு பொருள்கள் வழங்க டோக்கன் விநியோகிக்கப்படுகிறது.
கரோனா பொதுமுடக்கத்தால் தமிழக அரசு அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் கடைகளில் 13 வகையான பொருள்கள் வழங்க உத்தரவிட்டுள்ளது. அதற்கான டோக்கன்களை ஜூன் 3 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தது.
இதனடிப்படையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் அரிசி குடும்ப அட்டைகளுக்கு டோக்கன் வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. இந்த பணியினை வட்டாட்சியா் சரவணன், வட்ட வழங்கல் அலுவலா் கோதாண்டராமன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.
இது குறித்து வட்ட வழங்கல் அலுவலா் கோதாண்டராமன் கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்தூரை பொறுத்தவரை 76 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 51 ஆயிரத்து 984 அரிசி குடும்ப அட்டைகள் உள்ளன. டோக்கன் விநியோகம் தொடங்கி உள்ளது. அதில் பொருள் வாங்க வேண்டிய நேரம், தேதி ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். வியாழக்கிழமை (ஜூன் 3) இந்த பணி நிறைவடைந்துவிடும் எனத் தெரிவித்தாா்.