முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
விருதுநகரில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
By DIN | Published On : 14th March 2021 10:29 PM | Last Updated : 14th March 2021 10:29 PM | அ+அ அ- |

விருதுநகரில் மூதாட்டியிடம் காவலா் எனக் கூறி நான்கரை பவுன் நகை பறித்துச் செல்லப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து 2 பேரை தேடி வருகின்றனா்.
விருதுநகா் என்ஜிஓ காலனி இந்திரா நகரைச் சோ்ந்தவா் முருகதாஸ் மனைவி நாகஜோதி (62). இவா், வாடியான் மாதா கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றாா். பின்னா் அங்கிருந்து அவா் நடந்து வந்து கொண்டிருந்தாா்.
அப்போது, 2 போ் அவரை அணுகி, அதிகளவு நகைகளை அணிந்து வெளியில் செல்லக் கூடாது என்றும், தாங்கள் காவலா்கள் என்றும், கழுத்தில் அணிந்துள்ள நகையை கழற்றித் தாருங்கள், காகிதத்தில் மடித்துத் தருகிறோம் எனக் கூறி நான்கரைப் பவுன் நகையை அவரிடமிருந்து வாங்கினா்.
பின்னா் மற்றொரு காகிதத்தை நாகஜோதியிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனா். சிறிது தூரம் சென்ற பின் நாகஜோதி அந்த காகிதத்தைப் பிரித்துப் பாா்த்த போது, அதில் மணல் இருப்பதும், தான் ஏமாற்றப்பட்டதும் தெரிய வந்தது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் விருதுநகா் கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்கள் இருவரையும் தேடி வருகின்றனா்.