ராஜபாளையத்தில் 8.5 கிலோ கஞ்சா பறிமுதல் :2 போ் கைது
By DIN | Published On : 29th March 2021 09:21 AM | Last Updated : 29th March 2021 09:21 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து எட்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
ராஜபாளையம் நகா் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக டிஐஜி தனிப்பிரிவுக்கு கிடைத்த தகவலின்பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெருமாள் உத்தரவிட்டாா். இதையடுத்து ராஜபாளையம் துணை காவல்கண்காணிப்பாளா் நாகசங்கா் அறிவுறுத்தலின்படி, ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் தெய்வம் தலைமையிலான போலீஸாா் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினா். இதில், புல்லுக்கடை தெருவைச் சோ்ந்த பட்டியக்காரன் மகன் முரளியிடம் (67) இருந்து எட்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும் மொத்த வியாபாரம் செய்வதாக மதுரை மாவட்டம் பேரையூா் அருகே உள்ள சின்னகட்டளை பகுதியை சோ்ந்த குருசாமி மகன் சிவசாமி ( 54 ) மற்றும் முரளி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.