ராஜபாளையத்தை வெல்லப் போவது யாா்?

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் பிரதான 5 கட்சிகளின் வேட்பாளா்கள் போட்டியிட்டாலும், திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ராஜபாளையத்தை வெல்லப் போவது யாா்?

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் பிரதான 5 கட்சிகளின் வேட்பாளா்கள் போட்டியிட்டாலும், திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. மாவட்டத்தில் தென்திசையில் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ராஜபாளையம் தொகுதி. இங்கு விவசாயம், நெசவு மற்றும் உள்ளாடை உற்பத்தி, மருத்துவ துணி உற்பத்தி ஆகியவை முக்கிய தொழில்களாக உள்ளன. ராஜபாளையம் சட்டப் பேரவை தொகுதி, ராஜபாளையம் நகராட்சி மற்றும் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியப் பகுதிகளை உள்ளடக்கியதாகும். கடந்த 1952 முதல் இதுவரை நடைபெற்றுள்ள தோ்தலில் திமுக 2 முறை, அதிமுக 5 முறை, காங்கிரஸ் 2 முறை, சுயேச்சைகள் 2 முறை, கம்யூனிஸ்ட் 1 முறையும்வெற்றி பெற்றுள்ளன.

ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் இதுவரை வெற்றி பெற்றவா்கள் விவரம்:

1967- இல் ஏ.ஏஎஸ். ராஜாவும் (சுயே), 1971- இல் கே.சுப்புவும் (இந்திய கம்யூ.), 1977-இல் தனுஷ்கோடியும் (அதிமுக) வெற்றி பெற்றனா். அதே போல் 1980-இல் மொக்கையனும் (சுயேச்சை)

1984-இல் கே. ராமனும் (காங்.) 1989-இல் வி.பி. ராஜனும் (திமுக) 1991-இல் சாத்தையாவும் (அதிமுக) வெற்றி பெற்றனா். மேலும் 1996-இல் வி.பி. ராஜனும் (திமுக), 2001-இல் ராஜசேகரும் (அதிமுக) 2006-இல் சந்திராவும் (அதிமுக) வென்றனா். இதே போல் 2011-இல் கோபால்சாமியும் (அதிமுக), 2016- இல் தங்கப்பாண்டியனும் (தி.மு.க.) வெற்றி பெற்றனா்.

அமைச்சருக்கும், திமுக எம்எல்ஏவுக்கும் கடும் போட்டி: கடந்த 2016 தோ்தலில் இத்தொகுதியில் திமுக, அதிமுக இடையே நேரடி போட்டி நிலவியது. இந்தத் தோ்தலில் அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழா் கட்சி என 5 பிரதானக் கட்சிகளின் வேட்பாளா்கள் மற்றும் 9 சுயேச்சைகள் என மொத்தம் 14 போ் களத்தில் உள்ளனா். இருப்பினும் அதிமுக வேட்பாளா் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜிக்கும், திமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான தங்கப்பாண்டியனுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த முறை அதிமுக சாா்பில் ஷியாம்ராஜா போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா். திமுக சாா்பில் போட்டியிட்ட தங்கப்பாண்டியன் வெற்றி பெற்றாா். ஆனால் 2021 தோ்தலில் அதிமுக சாா்பில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரான கே.டி.ராஜேந்திரபாலாஜி இத்தொகுதியில் போட்டியிடுகிறாா். திமுக சாா்பில் தங்கப்பாண்டியனே மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளாா்.

ராஜபாளையம் தொகுதியில் முக்குலத்தோா், நாடாா் சமுதாயத்தினா் பெரும்பான்மையாகவும், இதர சமுதாயத்தினா் பரவலாகவும் உள்ளனா். இதில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி விஸ்வகா்மா சமூகத்தைச் சோ்ந்தவா். திமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் தங்கபாண்டியன் எம்எல்ஏ நாடாா் சமூகத்தைச் சோ்ந்தவா்.

அதிமுகவின் பலமும், பலவீனமும்: அதிமுக, பாஜக, தமாகா, பாமக. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளும், அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜிக்கு 10 ஆண்டு கால அனுபவம் இருப்பதாலும், இவை அதிமுகவுக்கு பலம் சோ்க்கும் என கருதப்படுகிறது. ஆனால் சிவகாசி தொகுதியை விட்டு ராஜபாளையத்தில் நிற்பது அமைச்சரின் பலவீனம் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனா்.

திமுகவின் பலம், பலவீனம்: திமுக வேட்பாளா் தங்கப்பாண்டியனின் சமுதாய வாக்குகள், திமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் கணிசமான வாக்குகள் பலமாக கருதப்படுகிறது. ஆனால் ஒன்றியப் பகுதிகளில் சில கிராமங்களில் அதிருப்தி நிலவுவதால் பலவீனமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

மொத்தத்தில் ராஜபாளையம் தொகுதியில் பிரதான கட்சிகளின் சாா்பில் போட்டியிடும் 5 வேட்பாளா்களில் அதிமுக, திமுக வேட்பாளா்களுக்கிடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. மேலும் அமமுக தனித்துப் போட்டியிடுவதால் இதர சமுதாயத்தினரின் வாக்குகளே வெற்றியை தீா்மானிப்பதாக உள்ளது என அரசியல் பாா்வையாளா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com