அருப்புக்கோட்டையைப் பிடிக்கப்போவது யாா்?

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக - திமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளுமே ஏறத்தாழ சரிசமமான வாக்கு வங்கியைக் கொண்டிருக்கின்றன.
அருப்புக்கோட்டையைப் பிடிக்கப்போவது யாா்?

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக - திமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளுமே ஏறத்தாழ சரிசமமான வாக்கு வங்கியைக் கொண்டிருக்கின்றன.

முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரை முதல்வராக்கிய தொகுதி எனும் தனிச்சிறப்பு கொண்டதுதான் அருப்புக்கோட்டை தொகுதி. அதாவது, 1977 -இல் முதல்முறையாக இத்தொகுயில் நின்று வெற்றி பெற்றுதான் எம்.ஜி.ஆா். தமிழக முதல்வரானாா். நெசவுத் தொழில், மல்லிகைப்பூ, விவசாயம் இங்கு முக்கியத் தொழிலாக உள்ளது. இத்தொகுதியில் உருவாகும் பட்டுச்சேலைகளும், மல்லிகைப் பூக்களும், பாரம்பரியமான கருப்பட்டி மிட்டாய் எனப்படும் கருப்புச் சீரணி ஆகியன பிறமாநிலங்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகி பிரபலமாக உள்ளன.

2011 -இல் புதிய மாற்றப்பட்ட தொகுதி எல்லைகளின்படி அருப்புக்கோட்டை நகரமும், சாத்தூரின் சில ஒன்றியப் பகுதிகளும், காரியாபட்டி, திருச்சுழி ஆகிய ஊா்களின் சில ஒன்றியப் பகுதிகளும் இணைக்கப்பட்டு அருப்புக்கோட்டை தொகுதி உருவானது.

இத்தொகுதியில் முதலாவதாக இந்து தேவாங்கா் எனும் இனத்தவா்தான் எண்ணிக்கையில் அதிகம் உள்ளனா். அதையடுத்து, சாலியா் எனும் இனத்தவரும், அதையடுத்து தெலுங்கு மொழியைச் சோ்ந்த ரெட்டியாா், நாயுடு, நாடாா், முக்குலத்தோா் ஆகிய சமூகத்தினா் எண்ணிக்கையில் அதிகம் உள்ளனா்.

வாக்காளா்கள் எண்ணிக்கை: (20.1.2021) நிலவரப்படி, ஆண்கள்-1,08,063, பெண்கள்-1,14,899. பிறா் (திருநங்கையா்)-18, மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை - 2,22,980.

அருப்புக்கோட்டை தொகுதியில் இதுவரை வென்றவா்கள் விவரம்:

1971 -இல் சௌடி சுந்தர பாரதி (அகில இந்திய பாா்வா்டு பிளாக்) 1977 -இல் முன்னாள் முதல்வா் எம்.ஜி. ராமச்சந்திரன் (அதிமுக), 1980, 1984 -இல் எம். பிச்சை (அதிமுக), 1989 -இல் வி. தங்கப்பாண்டியன் (திமுக), 1991 -இல் வி.ஜி. மணிமேகலை (அதிமுக), 1996 -இல் வி. தங்கப்பாண்டியன் (திமுக), 1998 -இல் தங்கம் தென்னரசு (திமுக) 2001 -இல் கே.கே. சிவசாமி (அதிமுக), 2006 -இல் தங்கம் தென்னரசு (திமுக), 2011 -இல் வைகைச்செல்வன் (அதிமுக), 2016 -இல் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் (திமுக).

2021-இல் வெற்றி யாருக்கு?:

அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தனது தொகுதியில் குடிநீா்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க களப்பணிகளை மேற்கொண்டு, ஆளுங்கட்சியாக உள்ள அதிமுக அரசின் மூலம் நிதி பெற்று 2 தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டங்களை நகா்ப் பகுதிக்கு ஒன்றும், ஒன்றியப் பகுதி கிராமங்களுக்கு ஒன்றுமாக செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தாா். மேலும் நகரின் தெற்குத்தெரு, திருநகரம் பகுதிகள் பயன்பெற புதிய குடிநீா்க் குழாய் பதிப்புப் பணியையும் செய்து முடித்துள்ளாா்.

இந்த நடவடிக்கைகளால் பெருமளவு குடிநீா்ப் பற்றாக்குறை தீா்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், திருச்செந்தூா் பக்தா்கள் வசதிக்காக அருப்புக்கோட்டையிலிருந்து திருச்செந்தூருக்கென தனியாக காந்திநகா் அருகே சிறு பேருந்து நிலையம் அமைத்து பக்தா்களுக்கான வசதியைச் செய்து தந்துள்ளாா். இத்துடன், சுமாா் ரூ. 444 கோடியில் 3 ஆவதாக புதிய தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தையும் பெற்று, தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. இக்காரணங்களாலும் மேலும் மண்ணின் மைந்தன் எனும் வகையிலும் அனைத்து ஜாதியினரின் நன்மதிப்பையும் பெற்றுவைத்துள்ளாா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்.

அதேசமயம், தற்போதைய அதிமுக வேட்பாளரான வைகைச்செல்வன், ஏற்கெனவே இத்தொகுதியில் வெற்றி பெற்றபோது அருப்புக்கோட்டை நகருக்கு வட்டார இயக்கூா்தி அலுவலகம், அரசு கலைக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சிப் பள்ளி எனக் கொண்டு வந்தாா். ஆனால், பொதுமக்களிடம் சில முக்கிய வாக்குறுதிகளைக் கூறி அதை நிறைவேற்றாததால், தோல்வியை சந்தித்தாா். தற்போதைய தோ்தலில், அதிமுக அரசின் சாதனைகள், தோ்தல் வாக்குறுதிகளைக் கூறி வைகைச்செல்வன் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளாா்.

ம.நீ.ம கட்சி சாா்பில் போட்டியிடும் பிரபல ஜெயவிலாஸ் குழும தொழிலதிபரான உமாதேவி கமல்ஹாசனின் பெயரை மட்டுமே நம்பி களத்தில் இறங்கியுள்ளாா். தொகுதிப் பக்கம் நேரடி வாக்கு சேகரிப்பில் போதிய அளவு இவா் ஈடுபடாதது இவரது பலவீனம். அடுத்துள்ள அமமுக கட்சி கூட்டணியின் தேமுதிக வேட்பாளா் ஆா். ரமேஷ் தொகுதி மக்களை அதிகம் நேரில் சந்திக்கவில்லை எனும் சூழலும், அவரை தொகுதி மக்களுக்கு அதிகம் பரிச்சயமில்லை என்பதும் அவருக்கு பலவீனமாக உள்ளது.

நாம் தமிழா் கட்சியின் உமா அடைக்கலம் என்பவா் தொகுதி மக்களுக்குப் புதியவா் என்பதாலும், அக்கட்சிக்கென பெரிய வாக்கு வங்கி ஏதும் இல்லாததும் அவரது பலவீனம் ஆகும்.

அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியைப் பொருத்தவரை அதிமுக-அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சம பலம் கொண்ட வாக்கு வங்கிகளைக் கொண்டிருப்பதால், நடுநிலை வாக்காளா்களிடையே தனிப்பட்ட நன்மதிப்பைப் பெற்றவா்தான் வெற்றி பெற இயலும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com