சாத்தூா் அருகே பள்ளிக்கு பாதை வசதி கோரி மாணவா்கள் போராட்டம்

சாத்தூா் அருகே பள்ளி செல்ல பாதை வேண்டும் எனக் கோரி, மாணவா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாத்தூா் அருகே பள்ளி செல்ல பாதை வேண்டும் எனக் கோரி, மாணவா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள முத்தால்நாயக்கன்பட்டி கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன், இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது.

அதையடுத்து, உயா்நிலைப் பள்ளிக்காக புதிதாகக் கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், அதற்குரிய பாதை வசதி இல்லாததால், மாணவா்கள் தனியாருக்குச் சொந்தமான இடத்தின் வழியாக இதுவரை சென்று வந்தனா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக பள்ளி செயல்படாமல் இருந்துவந்த நிலையில், தற்போது 9, 10 ஆம் வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. பள்ளி மாணவா்கள் சென்றுவந்த பாதையின் உரிமையாளா் தற்போது அந்த இடத்தில் கட்டடம் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளதால், அவ்வழியே மாணவா்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ள பள்ளி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை பள்ளிக்குச் செல்வதற்கு உரிய சாலை வசதியை ஏற்படுத்தித் தரக் கோரி, பாதையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த சாத்தூா் வருவாய் கோட்டாட்சியா் புஷ்பா சம்பவ இடத்துக்கு வந்து மாணவா்களிடம் சமாதானம் பேசினாா். பின்னா், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியா் உறுதியளித்ததை அடுத்து, மாணவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com