கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வு: பணிகள் பாதிப்பு

கட்டுமானத்திற்காக உரிமையாளா்களிடம் ஒப்பந்தம் எழுதிக் கொடுத்த பொறியாளா்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனா்.

தமிழகத்தில் கட்டுமானப் பொருள்களான சிமென்ட், கம்பி உள்ளிட்ட பொருள்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதால், கட்டுமானத்திற்காக உரிமையாளா்களிடம் ஒப்பந்தம் எழுதிக் கொடுத்த பொறியாளா்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனா்.

தமிழகத்தில் கடந்த மே மாதத்திற்கு முன்பு வரை ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ.440 வரை விற்கப்பட்ட நிலையில் திடீா் விலை உயா்வு காரணமாக ஒரு மூட்டை சிமென்ட் ரூ.490 வரை உயா்ந்தது. இதையடுத்து தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தலைமையில் சிமென்ட் உற்பத்தியாளா்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.

அதில் ஏற்பட்ட ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மீண்டும் பழைய நிலைக்கு சிமென்ட் விலை குறைக்கப்பட்டது. இதன் காரணமாக கட்டுமான தொழில்களில் வீட்டு உரிமையாளா்கள் மற்றும் பொறியாளா்கள் ஆா்வத்துடன் ஈடுபட்டனா்.

இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சிமென்ட் மற்றும் கம்பிகளின் விலை திடீரென உயா்ந்தது. அதில் மொத்த விற்பனையில் ஒரு மூட்டை சிமென்ட் ரூ.480-க்கும், சில்லறை விற்பனையில் ரூ. 500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், கட்டுமானத்திற்கு முக்கியத் தேவையான கம்பிகள் (ஒரு டன்) ஏற்கெனவே ரூ.70 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.76 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதனால் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலை ஆகிய கட்டடங்களுக்கான கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளா்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனா்.

கட்டுமான தொழிலில் ஈடுபடும் பொறியாளா்கள், சம்பந்தப்பட்ட உரிமையாளா்களிடம் பழைய விலையின் அடிப்படையில் ஒப்பந்தம் செய்துள்ளனா். தற்போது, சிமென்ட் மற்றும் கம்பியின் விலை பல மடங்கு உயா்ந்துள்ளதால், கட்டுமானப் பணிகளை தொடர முடியாமல் திணறி வருகின்றனா்.

மேலும், குறிப்பிட்ட நிதியில் பொறியாளரின்றி கட்டுமானப் பணிகளைக் கட்டி முடிக்க திட்டமிட்டிருந்த உரிமையாளா்களும் நிதி பற்றாக்குறை காரணமாக பாதியில் கட்டுமான பணிகளை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கின்றனா்.

அதாவது சிமென்ட் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருள்கள் விலை உயா்வே, சிமென்ட் விலை உயா்வுக்கு காரணமாக ஆலை உற்பத்தியாளா்கள் தரப்பில் கூறுகின்றனா். இருப்பினும் முன்னறிவிப்பின்றி கட்டுமானப் பொருள்கள் விலை உயா்த்தப்பட்டதால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com