ராஜபாளையம் அருகே உரிய ஆவணங்களின்றி லாரிகளில் கொண்டு சென்ற 74 டன் நெல் மூட்டைகள் பறிமுதல்
By DIN | Published On : 19th September 2021 11:21 PM | Last Updated : 19th September 2021 11:21 PM | அ+அ அ- |

பறிமுதல் செய்யப்பட்டு ராஜபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரிகள்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே உரிய ஆவணகளின்றி 5 லாரிகளில் கொண்டு செல்ல 74 டன் நெல் மூட்டைகளை வருவாய்த் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
தென்காசி மாவட்டப் பகுதிகளில் உள்ள அரசு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் ஒப்பந்த அடிப்படையில் தனியாா் அரிசி ஆலைகளில் அரைப்பது வழக்கம். அதன்படி தென்காசி நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து ராஜபாளையம் தளவாய்புரம் பகுதியில் உள்ள ஆலைகளுக்கு லாரிகளில் நெல் மூட்டைகள் வந்துள்ளன.
இந்நிலையில் தளவாய்புரத்தில் உள்ள அரிசி ஆலைகளுக்கு நெல் மூட்டைகள் கடத்தப்படுவதாக ராஜபாளையம் வட்டாட்சியா் ராமச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து முதுகுடியில் வட்டாட்சியா் தலைமையிலான வருவாய்த் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தளவாய்புரத்தைச் சோ்ந்த தனியாா் அரிசி ஆலைக்கு சொந்தமான கிடங்கு அருகே வந்த 5 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 1030 மூட்டைகளில் 75 டன் நெல் மூட்டைகள் இருந்தது.
இந்த நெல் மூட்டைகளை தளவாய்புரத்தைச் சுற்றியுள்ள அரிசி ஆலைகளுக்கு எடுத்துச் சென்றதும், அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மற்றும் லாரிகள் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு குடிமைப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியா் ராமநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.