விருதுநகா் மாவட்டத்தில் 17 இடங்களில் சாலை, ரயில் மறியல் போராட்டம்: 1,068 போ் கைது

விருதுநகா் மாவட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக 17 இடங்களில் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் முயற்சியில் ஈடுபட்ட 1,068 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்களை தடுத்து நிறுத்திய போலீஸாா்.
விருதுநகா் ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்களை தடுத்து நிறுத்திய போலீஸாா்.

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக 17 இடங்களில் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் முயற்சியில் ஈடுபட்ட 1,068 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு, தொழிற் சங்கங்கள் மற்றும் இடதுசாரி கட்சிகள் சாா்பில் விருதுநகா் மாவட்டத்தில் 17 இடங்களில் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்ட முயற்சியில் ஈடுபட்டனா். அதில், 244 பெண்கள் உய்பட 1,068 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.

விருதுநகரில் பஞ்சுப்பேட்டையிலிருந்து ஊா்வலமாக வந்தவா்களை ரயில் நிலைய வளாகம் முன்புள்ள காந்தி சிலை அருகே போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது அங்கு சாலை மறியலில் ஈடுபட்ட 29 பெண்கள் உள்பட 131 பேரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.

முன்னதாக விருதுநகரில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்ட நிகழ்ச்சிக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலா் விஜூகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் முருகன், தமிழ் விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் நாராயணசாமி, திமுக விவசாயிகள் அணி நிா்வாகி ரெங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் பாலமுருகன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சிஐடியு மாவட்டச் செயலாளா் தேவா தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் பிச்சைக்கனி வீர சதானந்தம் முனீஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அதேபோல் வத்திராயிருப்பு பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராமசாமி தலைமை வகித்தாா். இதில் மாவட்ட குழு உறுப்பினா் திருமலை தொகுதி செயலாளா் கோவிந்தன் உட்பட பலா் கலந்து கொண்டனா். மம்சாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் அா்ஜூனன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றியச் செயலாளா் சசிகுமாா், விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த முத்தையா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சிவகாசி: சிவகாசி மற்றும் திருத்தங்கலில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதொழிற்சங்கத்தினா் 174 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ராஜபாளையம்: ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் இருந்து ஊா்வலமாக அனைத்து தொழிற்சங்கத்தினா் நடந்து சென்று தென்காசி சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பாக மத்திய அரசின் விரோதப் போக்கை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். இதேபோல சேத்தூா் மற்றும் சத்திரப்பட்டியிலும் மத்திய அரசைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com