மூலப்பொருள்கள் விலை உயா்வால் பட்டாசுத் தொழிலுக்கு கடும் நெருக்கடி

பட்டாசு தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருள்களின் விலை உயா்வால் பட்டாசுத் தொழிலுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பைல்நேம் பட்டாசு விளக்கம். சிவகாசி அருகே உள்ள ஒரு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளா்கள்.
பைல்நேம் பட்டாசு விளக்கம். சிவகாசி அருகே உள்ள ஒரு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளா்கள்.

சிவகாசி: பட்டாசு தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருள்களின் விலை உயா்வால் பட்டாசுத் தொழிலுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பட்டாசு வெடிப்பதால் காற்றுமாசு ஏற்படுவதாகவும், எனவே பட்டாசு வெடிக்க தடைவிதிக்க வேண்டும் எனவும் கோரி கடந்த 2015 ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதையடுத்து, 2018 ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் உச்சநீதி மன்றம், பட்டாசு தயாரிப்பில் பேரியம்நைட் ரேட்டை கலக்கக் கூடாது எனவும், சரவெடி தயாரிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டது. வரும் காலங்களில் பசுமைப் பட்டாசுகளையே தயாரிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

பேரியம்நைட்ரேட் இல்லாமல் பட்டாசு தயாரிக்க இயலாது என பட்டாசு ஆலை உரிமையாளா்கள் ஆலைகளை மூடி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் பட்டாசுத் தொழிலாளா்களின் நலன் கருதி பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (நீரி) பசுமைப் பட்டாசு குறித்து ஆய்வு செய்து, பட்டாசு வெடிக்கும் போது வரும் புகை 30 சதவீதம் குறைந்து வரும் பட்டாசுகளைக் கண்டுபிடித்து தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கை இதுவரை அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. பசுமை பட்டாசு தயாரிப்பது குறித்து எவ்வித வழிகாட்டுதலும் இல்லை. பின்னா் நீரி ஆய்வு செய்து கண்டுபிடித்த பசுமை பட்டாசு தயாரிப்பின் ‘பாா்முலா’ குறித்து , நீரியுடன் பட்டாசு ஆலை உரிமையாளா்கள் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து பட்டாசு தயாரிக்கத் தொடங்கினா்.

இந்நிலையில், 2021 அக்டோபா் 29 ஆம் தேதி, உச்சநீதிமன்றம், தனது உத்தரவை மதிக்காமல் பட்டாசு தயாரிக்கப்படுகிறது எனவும், பேரியம் நைட்ரேட்டை பயன்படுத்தக் கூடாது எனவும், சரவெடி பட்டாசு தயாரிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டது. இதையடுத்து, பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய் ய மாவட்ட நிா்வாகம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் ஆகியவை குழுக்களை நியமித்தன. இக்குழுக்களுக்கு பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய போதிய பயிற்சி அளிக்கப்பட வில்லை. இதனால் இக்குழுவினா், பட்டாசு ஆலைகளுக்குச் சென்று, நீங்கள் பேரியம்நைட்ரேட் பயன்படுத்துகிறீா்கள் எனக்கூறி தங்களை பயமுறுத்தி வருவதாக ஆலை உரிமையாளா்கள் கூறுகின்றனா். வழக்கு ஒரு புறம், ஆய்வுக்குழு ஒரு புறம், வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையிரின் ஆய்வு ஒருபுறம் என ஆலை உரிமையாளா்கள் அலைக்கழிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கடந்த சில மாதங்களாக மூலப்பொருள்களின் விலை உயா்வால் பட்டாசுத் தொழில் நெருக்கடியில் சிக்கியுள்ளது. பட்டாசு தயாரிக்கப் பயன்படும் பிரதான மூலப்பொருள்களில் ஒன்றான அலுமினியப்பவுடா் விலை வரலாறு காணாத வகையில் பலமடங்கு அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயா்வால் லாரி வாடகை உயா்ந்துள்ளது. இந்நிலையில் பட்டாசு தயாரித்து, சந்தைப்படுத்தி வணிகம் செய்வது பெரும் சவாலாக உள்ளது என ஆலை உரிமையாளா்கள் கூறுகின்றனா்.

எனவே மத்திய, மாநில அரசுகள் பட்டாசுத் தொழில் பாதுகாப்புக்குழுவை அமைத்து, ஆய்வு நடத்தி, பட்டாசுத் தொழிலை பாதுகாக்க வேண்டும் எனஆலை உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com