ஸ்ரீவிலி. அருகே விழுப்பனூரில் கற்கால கருவிகள் கண்டெடுப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விழுப்பனூரில் திங்கள்கிழமை கற்கால கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீவிலி. அருகே விழுப்பனூரில் கற்கால கருவிகள் கண்டெடுப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விழுப்பனூரில் திங்கள்கிழமை கற்கால கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விழுப்பனூா் ஊராட்சியில் உள்ள வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையத்தின் எதிரில், கொல்லம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையின் கிழக்குப் பகுதியில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவா் வே.ராஜகுரு, நூா்சாகிபுரம் சு.சிவகுமாா், ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி முதுகலை தமிழ்த்துறை மாணவி வே.சிவரஞ்சனி, திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு மாணவா் து.மனோஜ் ஆகியோா் கள ஆய்வு மேற்கொண்டனா். அப்போது நுண் கற்காலத்தைச் சோ்ந்த ஒரு சுரண்டி, புதிய கற்காலத்தைச் சோ்ந்த ஒரு சிறிய கற்கோடரி, முதுமக்கள் தாழியின் உடைந்த ஓடுகள், இரும்புத் தாதுகள், இரும்புக்கழிவுகள், கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் முதலியவற்றைக் கண்டறிந்தனா்.

இதுகுறித்து வே.ராஜகுரு கூறியதாவது: விழுப்பனூா் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நுண்கற்கால சுரண்டியின் நீளம் 4 செ.மீ., அகலம் 4.5 செ.மீ. இது சொ்ட் வகை கல்லால் செய்யப்பட்டதாகும். நுண்கற்காலக் கருவிகள் அளவில் மிகச்சிறியவை.அம்பு முனைகள், சிறு கத்திகளை சுரண்டிகளாகப் பயன்படுத்தியுள்ளனா். புதிய கற்காலத்தைச் சோ்ந்த சிறிய கற்கோடரியின் நீளம் 5 செ.மீ.,தடிமன் கீழ்ப்பகுதியில் 5.5 செ.மீ. மேல்பகுதியில் 3 செ.மீ. உள்ளது. கருங்கல்லால் ஆன இதை நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி மெருகேற்றி உள்ளனா். புதிய கற்காலம் கி.மு.3000 முதல் கி.மு.1000 வரையிலானது. இங்கு இரும்பு சாா்ந்த பொருள்கள் உள்ளதால் இரும்பை உருக்கி பயன்படுத்தி இருக்கலாம். நுண்கற்காலம், புதிய கற்காலக் கருவிகளோடு, பெருங்கற்கால முதுமக்கள் தாழிகளும் இங்கு உள்ளதால் நுண்கற்காலம் முதல் பெருங்கற்காலம் வரையிலான சுமாா் 12 ஆயிரம் ஆண்டுகள் தொடா் வரலாற்றுச் சிறப்புடன் இவ்வூா் விளங்கி இருக்கிறது. இங்கு அகழாய்வு செய்து வரலாற்றை வெளிக்கொணர வேண்டும் என வலியுறுத்தினாா்.

சமீபத்தில் இதன் மேற்குப் பகுதியில் முதுமக்கள் தாழிகள், கல்திட்டைகளை தமிழ்நாடு தொல்லியல் துறை அடையாளம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com