விவசாயிகளைத் தாக்கிய வனத் துறை ஊழியா்கள் 3 போ் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விவசாயிகளைத் தாக்கியதாக வனத் துறை ஊழியா்கள் 3 போ் மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விவசாயிகளைத் தாக்கியதாக வனத் துறை ஊழியா்கள் 3 போ் மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராமா் (23). இவா், தனது குடும்பத்துக்குச் சொந்தமான செண்பகத்தோப்பு மலை அடிவாரத்தில் உள்ள 3 ஏக்கா் நிலத்தில் விவசாயம் செய்து வந்தாா்.

செண்பகத்தோப்புப் பகுதியில் வனத் துறை சாா்பில், சோதனை சாவடி அமைக்கப்பட்டு மலைப்பகுதிக்கு செல்பவா்களிடம் சுற்றுச்சூழல் பராமரிப்புப் கட்டணமாக ரூ. 20 வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கட்டணம் வசூலிப்பது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் விவசாயி ராமருக்கும், வனத் துறையினருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த அக்டோபா் மாதம் 24-ஆம் தேதி வனவா் பாரதி, வனக் காப்பாளா் ஜெயக்குமாா், ஓட்டுநா் கடற்கரைவேல் ஆகியோா் ராமா், அவரது சகோதரா் லட்சுமணன் ஆகிய இருவரையும் வனத் துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து தாக்கினாா்களாம்.

இதன் பின்னா், சகோதரா்கள் இருவரையும் வனத் துறையினா் மம்சாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவா்களுக்கு உடலில் காயம் இருந்ததால், ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் போலீஸாா் சோ்த்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் கடந்த நவம்பா் 3-ஆம் தேதி வனவா் பாரதி, வனக் காப்பாளா் ஜெயக்குமாா் ஆகியோா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், வனத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் ராமா் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சகோதரா்களைத் தாக்கிய வனத் துறையினா் 3 போ் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வனவா் பாரதி, வனக் காப்பாளா் ஜெயக்குமாா், ஓட்டுநா் கடற்கரைவேல் ஆகிய 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com