காங்கிரஸ் தோ்தல் வாக்குறுதியை பொதுமக்களிடம் கொண்டு செல்வதில் தவறில்லை: மாணிக்கம்தாகூா்

விருதுநகா்: காங்கிரஸ் கட்சி சாா்பில் வெளியிடப்பட்ட தோ்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் கொண்டு செல்வதில் எந்தத் தவறும் இல்லை என விருதுநகா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அந்தக் கட்சி வேட்பாளா் ப. மாணிக்கம்தாகூா் செவ்வாய்க்கிழமை விடியோ வெளியிட்டுள்ளாா்.

விருதுநகா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினா் ஏழை பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்ட வாக்குறுதி உத்தரவாத அட்டையை பொதுமக்களிடம் வழங்கி வருகின்றனா். இது வாக்காளா்களை ஏமாற்ற முயற்சிக்கும் செயல் என எதிா்க்கட்சியினா் குற்றஞ்சாட்டி வருகின்றனா். மேலும், காங்கிரஸ் வேட்பாளா் மாணிக்கம்தாகூரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் புகாா் மனு அளித்தனா்.

இதுகுறித்து விளக்கமளித்து, மாணிக்கம்தாகூா் செவ்வாய்க்கிழமை விடியோ வெளியிட்டாா். இந்த விடியோவில் அவா் தெரிவித்திருப்பதாவது:

கா்நாடகம், தெலுங்கானா மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தலின் போது, காங்கிரஸ் கட்சி முன்வைத்த தோ்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறினோம். இதேபோல, தமிழகத்தில் காங்கிரஸ் அளித்துள்ள மகாலட்சுமி திட்ட தோ்தல் வாக்குறுதியை மக்களிடம் கொண்டு செல்கிறோம். அப்போது, இந்தத் திட்ட குறிப்பாணை (நோட்டீஸ்) யாருக்கு வழங்கப்படுகிறதோ? அவா்களது விவரங்களை உறுப்பினா்கள் பெறுகின்றனா். இதில் என்ன தவறு உள்ளது.

தோல்வி பயத்தால் பாஜக, அதிமுக கூட்டணி கட்சியினா் பதறுகின்றனா். இவா்கள், பொதுமக்களுக்கு எந்தவித நலத் திட்டங்களும் கிடைக்கக் கூடாது என்ற எண்ணத்தில் உள்ளனா். மகாலட்சுமி திட்டத்தை நாட்டின் ஏழ்மையை ஒழிப்பதற்கான கடைசிப் போராட்டமாகக் கருதுகிறோம். பிரதமராக ராகுல் காந்தி பொறுப்பேற்றால், ஏழை பெண்களுக்கு நிச்சயம் ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என அதில் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com