தீ விபத்து இழப்பீடு உயர்த்தப்படுமா?

தீ விபத்தில் வீடுகளை இழப்பவர்களுக்கு, இழப்பை ஈடு செய்யும் வகையில் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

தீ விபத்தில் வீடுகளை இழப்பவர்களுக்கு, இழப்பை ஈடு செய்யும் வகையில் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
தீப்பற்றாத கூரை,  தீப்பற்றாத கட்டுமானப் பொருள்கள்,  தீ பரவாமல் தடுக்கும் கருவிகள் என பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிகள் தற்போது நடைமுறைக்கு வந்திருந்தாலும், இந்த விஞ்ஞான வளர்ச்சிகளை நுகர முடியாத வாழ்வாதாரம் கொண்ட ஏழை மக்களே இந்தியாவில் அதிகம்.  
கீற்று அடைப்புகளையே சுவராகக் கொண்ட வீடுகளும், மண் சுவரும், கூரைக் கொட்டைகையும் கொண்ட வீடுகள்தான் தமிழகத்தின் கிராமப்பகுதிகளில் இன்றளவும் பரவலாக உள்ளன. இந்தியா வல்லரசு கனவை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருந்தாலும், நகர்ப்புறங்களின் ஒரு சில பகுதிகளை குடிசை வீடுகளே ஆக்கிரமித்துள்ளன.
    நகரப் பகுதிகளில் குடிசை வீடுகளே இல்லாத நிலையை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் திட்டங்களை இயற்றினாலும், டெல்டா மாவட்டங்களின் பல நகரப் பகுதிகளில் இன்றளவும் குடிசை வீடுகளில் மாற்றம் ஏற்படவில்லை. காரணம், டெல்டா மாவட்டங்களின் பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகள் கோயில் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான நிலங்களிலேயே அமைந்திருப்பதும், பட்டா இல்லாத இடங்களுக்கு அரசுத் திட்டங்கள் மறுக்கப்படுவதும் குடிசைகள் நிரந்தர கட்டடங்களாக மாறுவதற்குத் தடையாக உள்ளன.
இதனால், டெல்டா மாவட்டங்களில் குடிசை வீடுகளும், தீ விபத்துகளும் தவிர்க்க இயலாததாகவே உள்ளன.
குடிசை வீடுகள் தீக்கிரையாகும் போது தீயணைப்புத் துறையினரும், வருவாய்த் துறையினரும் மேற்கொள்ளும் சேத விவரக் கணக்கெடுப்புப் பெயரளவு மதிப்பீடாகவே உள்ளது.
மேலும், இந்தக் கணக்கெடுப்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டது என மதிப்பீடு அளிக்கப்பட்டாலும், அதனால் ஒரு பயனும் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைப்பதில்லை.
    காரணம், தீ விபத்தில் பாதிக்கப்பட்டது குடிசை வீடாக இருந்தாலும், ஓட்டு வீடாக இருந்தாலும், கான்கிரீட் வீடாக இருந்தாலும் அரசு நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் ரொக்கப் பணம், வேட்டி, சேலை, 5 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கப்படுகிறது.
    மிகச் சிறிய குடிசை வீட்டுக்குக்கூட சுமார் 100-க்கும் அதிகமான தென்னங்கீற்றுகள் தேவை. 100 தென்னங்கீற்றின் விலை ரூ. 600. இதைத் தவிர, மூங்கில்கள், தென்னம்பாலை, கயிறுகள், கட்டுமானத் தொழிலாளர்கள் கூலி என செலவுத் தொகை ரூ. 20 ஆயிரத்தையும் விஞ்சும்.
   இந்த நிலையில், ஏற்கெனவே தீ விபத்தில் அனைத்து உடைமைகளையும் இழந்த ஏழை மக்களுக்கு அரசு அளிக்கும் தீ விபத்து நிவாரணம், அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பின் 10 சதவீதத்தைக் கூட பூர்த்தி செய்வதாக இல்லை. தீ விபத்தில் உடைமைகள் அனைத்தையும் இழந்து நிர்கதியான ஏழைகள், அருகில் உள்ள உறவினர்கள் அல்லது நண்பர்களின் வீடுகளில் தஞ்சமடைந்து, சொந்தக் கிராமத்திலேயே நீண்ட நாள்கள் அகதிகளாக வாழ நேரிடுவது பெரும் வேதனை.
தீ விபத்தில் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்னை,
தீ விபத்தில் எரிந்து சாம்பாலான குடும்ப அட்டை, ஆதார் அட்டை, தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பயனாளர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி, கல்லூரி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை மீண்டும் பெறுவதற்கு, பாதிக்கப்பட்டவர்கள் படும் வேதனையும் விவரிக்க முடியாதது.
    இந்தியா டிஜிட்டல் மயமாகி வரும் சூழலிலும் இதுபோன்ற நிலை நீடிப்பது சரிதானா? என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து, தீ விபத்தில் பாதிக்கப்படும் குடிசை வீடுகளுக்கான தொகையை ரூ. 20 ஆயிரமாக உயர்த்தி வழங்குவதுடன், பாதிக்கப்பட்டவர்கள் இழந்த அனைத்துச் சான்றுகளையும் முன்னுரிமை அடிப்படையில், தாமதமின்றி பெற நடவடிக்கை தேவை.
   மத்திய அரசின் பங்களிப்புடன், மாநில அரசு குடிசை வீடுகளுக்குக் குழுக் காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அரசுத் துறைகளின் அறிக்கையின் அடிப்படையில், இழப்பை ஈடு செய்யும் வகையில் இழப்பீடுத் தொகையை வழங்க எளிய முறையிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தீ விபத்துகளில் வீடிழந்து தவிப்போரின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com