சென்னை- கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை ரயில் பாதைத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பொதுமக்களின்

சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை ரயில் பாதைத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பயனடைவர்.
சென்னையில் இருந்து மாமல்லபுரம், மரக்காணம், புதுச்சேரி, கடலூர் மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், கூடங்குளம் வழியாக கன்னியாகுமரிக்கு கிழக்கு கடற்கரை வழியாக ரயில் சேவை தொடங்கப்பட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
இத்திட்டம் குறித்து தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது அப்போதைய ரயில்வேத் துறை அமைச்சர் சதானந்தகௌடா, விரைவில் திட்ட ஆய்வு கருத்துரை கோரப்படுமென தெரிவித்தார். ஆனால், இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
சென்னையில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரி வழியாக கடலூர் துறைமுகம் வரை 178 கி.மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம் கடந்த 2008-09 ஆம் ஆண்டு ரயில்வே நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டும், அத்திட்டம் ஆய்வு நிலையிலேயே உள்ளது. பேரளத்தில் இருந்து காரைக்கால் வரை 24 கி.மீட்டர் தொலைவுக்கு புதிய வழித் தடம் அமைக்கும் பணியிலும் முன்னேற்றம் இல்லை. கடலூரில் இருந்து மயிலாடுதுறை, பேரளம் வரையிலும், காரைக்காலில் இருந்து வேளாங்கண்ணி வரையிலும் தற்போது அகலப்பாதையில் ரயில் சேவை நடைபெற்றுவருகிறது.
வேளாங்கண்ணியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரையிலும், திருத்துறைப்பூண்டியிலிருந்து காரைக்குடிக்கு 121 கி.மீட்டர் தொலைவுக்கும் ரயில் பாதையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. காரைக்குடியில் தொடங்கி ராமநாதபுரம், கீழக்கரை, சாயல்குடி, தூத்துக்குடி, காயல்பட்டினம், ஆறுமுகனேரி, கூடங்குளம் வழியாக கன்னியாகுமரி வரை 463 கி.மீட்டர் தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்க ரூ.1,965 கோடி மதிப்பில் திட்டம் தயார் செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்படாமல் ஆய்வு நிலையிலேயே உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் கன்னியாகுமரி- சென்னை இடையிலான 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும், புதுவை மாநில மக்களும் பெரிதும் பயனடைவர். சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலை ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தப்பட உள்ள நிலையில், இந்த ரயில்வே திட்டமும் செயல்படுத்தப்பட்டால் இப்பகுதியில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்தில் பெரிய மாற்றம் ஏற்படுவதுடன் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும். மேலும், சென்னையில் இருந்து கடலூர், காரைக்கால், தூத்துக்குடி துறைமுகத்துக்கு நேரடியாக சரக்குகளை அனுப்பவும், கூடங்குளம் அணுமின் திட்டம் மற்றும் சுற்றுலா, ஆன்மிக தலங்களை இணைக்கவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழித் தடத்துக்காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கும், ஆய்வு முடிந்த திட்டங்களுக்கும் மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி, போதிய நிதி ஒதுக்கீடு செய்து, இந்த திட்டத்தை விரைந்து முடித்து, ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்பதே கிழக்கு கடற்கரையோர பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com