மறைந்து வரும் மார்கழி மாக்கோலங்கள்

நம் கலாசாரத்தின் முக்கிய அம்சமாக விளங்கும் மார்கழி மாக்கோலங்கள் மறைந்து வருகின்றன.

நம் கலாசாரத்தின் முக்கிய அம்சமாக விளங்கும் மார்கழி மாக்கோலங்கள் மறைந்து வருகின்றன.
மார்கழி மாதம் வந்தாலே, கன்னிப்பெண்கள், இல்லத்தரசிகள் சேர்ந்து போடும் மார்கழி மாக்கோலங்களை இன்று தெருக்களில் காணமுடிவதில்லை.
மார்கழி கோலம் போடுவதில் உள்ள சூட்சமங்கள், தத்துவங்கள் இப்போதுள்ள இளம்பெண்கள் மறந்துபோயிருக்கக் கூடும் என்பதால் அவற்றின் காட்சிகள் இப்போது தெருக்களில் இல்லை.
மங்கள சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படும் மார்கழி கோலம் போடுவது என்பது சமீப காலங்களில் குறைந்து வருகிறது. மார்கழியில், மகாலட்சுமியை வரவேற்க ஒவ்வொரு வீட்டின் வாசல்களில் அலங்காரத்துடன் கோலங்கள் போடுவது இப்போது குறைந்துள்ளது.
இதுகுறித்து குடும்பத் தலைவியும், யோகா ஆசிரியையுமான சுகன்யா சாமிநாதன் கூறியது: மங்கள சின்னங்களில் ஒன்றாக கருதப்படுபவைகளில் மாக்கோலமும் ஒன்று. மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஐந்து மணிக்குள் பெண்கள் குறிப்பாக கன்னிப்பெண்கள், இல்லத்தரசிகள், சிறுமிகள் அக்கம் பக்கம் வீடுகளில் உள்ள பெண்கள் என அனைவரும் ஒன்று கூடி, தெருவில் ஒவ்வொரு வீட்டின் வாசல்களில் மாக்கோலம் போடுவார்கள். 
அந்த மாக்கோலத்தில் பச்சரிசி மாவு கலந்து போடுவார்கள். இதற்கு காரணம், ஊர்வனவற்றில் எறும்பு, ஈ போன்ற உயிர்களும், பறப்பனவற்றில் காகம், குருவி இனங்களும், மேலும் அணில் உள்ளிட்ட விலங்கினங்களுக்கும் உணவு வழங்கும் விதமாகவும் இக்கோலங்கள் போடப்படும். இது ஒருவகை யோகா வகை முறைதான்.
மார்கழி மாதத்தில் அதிகாலையில் வீசும் காற்று, நம் உடலில், குறிப்பாக பெண்களுக்கு ஏற்றதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்த கோலங்கள் போடப்பட்டு, நடுவில் வீட்டு கொல்லைகளில் பூக்கின்ற பூக்களைப் பறித்து போடுவதிலும் ஒரு விளக்கமுண்டு. வீடுகளில் மொட்டுக்களாக போட்டால் வீட்டில் கன்னிப்பெண்கள் இருப்பதையும், பூத்த பூக்களைப் போட்டால் இல்லத்தரசிகள் இருப்பதையும் வெளிக்கொணரும் விதமாக இந்த கோலங்கள் அமையும். 
மற்ற நாள்களில் வீட்டு வாசல்களில் போடப்படும் கோலங்களைக் காட்டிலும், மார்கழி மாதத்தில் போடப்படும் வண்ண, வண்ண கோலங்கள் கண்ணைக் கவரும் விதத்தில் இருக்கும். மனதில் மகிழ்ச்சி பெருகும். ஆனால் தற்போது, மார்கழி மாதத்தில் போடும் கோலங்கள் ஒருசில வீடுகளைத்தான் அலங்கரிக்கின்றன. மற்றபடி, தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன
என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com