நெல் அறுவடைக்கு இயந்திரம் பற்றாக்குறை: விவசாயிகள் அவதி

திருவாரூர் மாவட்டத்தில், சம்பா அறுவடை தொடங்கியுள்ள நிலையில், அறுவடைக்குப் போதிய இயந்திரம் கிடைக்காமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

திருவாரூர் மாவட்டத்தில், சம்பா அறுவடை தொடங்கியுள்ள நிலையில், அறுவடைக்குப் போதிய இயந்திரம் கிடைக்காமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 
டெல்டா பகுதியான திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டங்களில் கடந்த 6 ஆண்டுகளாக வறட்சி மற்றும் பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் குறுவை, சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில், நிகழாண்டு, காலம் தாழ்ந்து மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும், இதைப் பயன்படுத்தி பெரும்பாலான விவசாயிகள் சம்பா சாகுபடிசெய்துள்ளனர்.
இதுகுறித்து, திருவாரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் மயில்வாகனன் கூறும்போது,  "திருவாரூர் மாவட்டத்தில், நிகழாண்டு 47 ஆயிரம் ஹெக்டேர் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.  தற்போது, சுமார் பத்தாயிரம் ஹெக்டேரில் அறுவடை நடைபெற்றுள்ளது' 
என்றார்.
இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக விவசாயப் பணிகள் இல்லாததால் பெரும்பாலான விவசாயத் தொழிலாளர்கள் திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்குச் சென்றுவிட்டனர். இதனால், தற்போது அறுவடை தொடங்கியுள்ள நிலையில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, நெல் அறுவடை இயந்திரங்கள் மூலம் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளனர்.  ஆனால், வேளாண் பொறியியல் துறை வசம் உள்ள அறுவடை இயந்திரம் குறைவாக இருப்பதால் அறுவடை காலதாமதமாகி வருகிறது.  இதனால், விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து, கொரடாச்சேரி ஒன்றிய திமுக செயலாளர் சேகர் (எ) கலியபெருமாள் கூறியது:
திருவாரூர் மாவட்டத்தில், கடந்த பல ஆண்டுகளாக சாகுபடி பணிகள் நடைபெறாத நிலையில், நிகழாண்டு சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளன.  தற்போது, பொங்கலுக்குப் பிறகு, அறுவடைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளன.  இருப்பினும், வேளாண் பொறியியல் துறையில் போதிய எண்ணிக்கையிலான அறுவடை இயந்திரங்கள் இல்லை.  அதுதவிர, முன்பதிவு அடிப்படையில் இங்கு இயந்திரங்கள் வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும், வேண்டியவர்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
 இதனால், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, அறுவடைப் பணிகள் நடைபெறுகின்றன.  இவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ரூ. 2 ஆயிரத்துக்கு மேல் வசூலிக்கின்றனர்.  ஏற்கெனவே மழை உள்ளிட்ட பாதிப்புகளைத் தாண்டி விவசாயிகள் பயிர்களைப் பாதுகாத்து அறுவடை செய்யும் நேரத்தில், அறுவடை செய்ய கூலியும் அதிக அளவில் வழங்க வேண்டியுள்ளது. எனவே, அதிக எண்ணிக்கையிலான அறுவடை இயந்திரங்களை உடனடியாக வரவழைத்து விவசாயிகளுக்கு உதவிட வேண்டும்.  இதில் காலதாமதம் ஏற்பட்டால் கட்சி அனுமதி பெற்று விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம் என்றார்.
இதுகுறித்து, திருவாரூர் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் கே.பி. பன்னீர்செல்வம் கூறியது:
 திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 10 அறுவடை இயந்திரங்கள் உள்ளன. முன்பதிவு அடிப்படையில், இயந்திரங்கள் விவசாயிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. செயின் அறுவடை இயந்திரத்துக்கு மணிக்கு ரூ.1415-ம், டயர் அறுவடை இயந்திரத்துக்கு மணிக்கு ரூ.875-ம் வாடகை வசூலிக்கப்படுகிறது.  மேலும், இரண்டு அறுவடை இயந்திரங்கள் வரவழைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
கடந்த 6 ஆண்டுகளாக நெல் சாகுபடி சரிவர மேற்கொள்ளப்படாத நிலையில், நிகழாண்டு சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  இதனை கருத்தில் கொண்டு அரசு விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல்லை காலதாமதமின்றி அறுவடை செய்ய, கூடுதல் அறுவடை இயந்திரங்களை ஏற்பாடு செய்து வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com