நீடாமங்கலத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டதால் போக்குவரத்து நெருக்கடி

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் சனிக்கிழமை அதிகாலை சரக்கு ரயிலின் காலிப்பெட்டிகளைப் பிரிக்கும்

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் சனிக்கிழமை அதிகாலை சரக்கு ரயிலின் காலிப்பெட்டிகளைப் பிரிக்கும் பணி நடைபெற்றதால், நெடுஞ்சாலைப் போக்குவரத்து ஒருமணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
நீடாமங்கலம் ரயில் நிலையம் வழியாக நாள்தோறும் பயணிகள் ரயில்கள், விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் வந்து செல்கின்றன. இதனால், நீடாமங்கலத்தில் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுகிறது. நெடுஞ்சாலைப் பகுதியில் ரயில்வே கேட் உள்ளதால், கேட் திறக்கப்படும் வரை வாகனங்கள் காத்திக்க வேண்டிய நிலை நிலவுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு தஞ்சை பகுதியிலிருந்து காலிப்பெட்டிகளுடன் சரக்கு ரயில் நீடாமங்கலத்துக்கு வந்தது. இதனால், ரயில்வே கேட் மூடப்பட்டது. சரக்கு ரயிலின் காலிப்பெட்டிகள் நீடாமங்கலத்தில் வைத்து பிரிக்கப்பட்டு, மற்ற காலிப்பெட்டிகளுடன் இணைக்கப்பட்டு, திருவாரூர் நோக்கிச் செல்லும் வகையில், வேறு தண்டவாளத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது.
5.30-க்கு தொடங்கிய இந்த பணி, 6.45 வரை அதாவது, ஒருமணிநேரம் 15 நிமிடம் வரை நீடித்தது. இதனால், நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
பட்டுக்கோட்டை, மன்னார்குடி பகுதிகளிலிருந்து நீடாமங்கலம் வழியாக கும்பகோணம், சென்னை வரையிலும், பெங்களூரு, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட நகரங்களிலிருந்து நீடாமங்கலம் வழியாக திருவாரூர், நாகப்பட்டினம் ,வேளாங்கண்ணி, காரைக்கால் வரையிலும் செல்லும் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் சாலையில் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.
இது மட்டுமல்லாமல் வேளாங்கண்ணி, காரைக்கால் ஆகிய ஊர்களிலிருந்து தஞ்சாவூர், திருச்சி மற்றும் பல்வேறு ஊர்களுக்கும், சென்னை, கும்பகோணம் பகுதிகளிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளும், இதர வாகனங்களும் அணிவகுத்து நின்றன.
காலை வேளையில் அடிப்படை வசதிகளற்ற நீடாமங்கலத்தில், நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்ததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
நீடாமங்கலத்தில் ஓரளவுக்கு போக்குவரத்து நெருக்கடியைத் தடுக்க வேண்டுமானால், தஞ்சாவூர்- நாகப்பட்டினம் இருவழிச்சாலை திட்டப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். இது மட்டுமல்லாமல், நீடாமங்கலத்தில்  மேம்பாலம் அமைக்கும் பணியையும் மத்திய, மாநில அரசுகள் உரிய கவனம் செலுத்தி, தொடங்கினால் இந்த பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com