கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் மீட்பு

திருவாரூர் அருகே கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டார்.

திருவாரூர் அருகே கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டார்.
திருவாரூரில் கிருஷ்ணா ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருபவர் நீதிமோகன். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றபோது, காரில் வந்த மர்ம நபர்கள் நீதிமோகனை கடத்திச் சென்றனர். அவரை விடுவிக்க ரூ. 10 கோடி கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலக உதவியாளர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், போலீஸார் தனிப்படை அமைத்து நீதிமோகனைத் தேடிவந்தனர். இவர், மாதத் தவணைத் திட்டத்தில் நிலம் வழங்குவதாக பலரை மோசடி செய்ததாக வழக்குகள் உள்ளன. இதனால், இதில் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் கடத்தினார்களா என்ற கோணத்திலும் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் மன்னார்குடியைச் சேர்ந்த சிலர் இந்த கடத்தலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில், தனிப்படை போலீஸார் மன்னார்குடி, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை தேடுதல் பணியை தீவிரப்படுத்தினர். அப்போது, கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் உள்ள ஒரு வீட்டில் நீதிமோகன் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த போலீஸார், அங்கிருந்த நீதிமோகனை மீட்டனர். போலீஸார் வருவதை முன்கூட்டியே அறிந்த கடத்தல்காரர்கள் தப்பி ஓடிவிட்டனர். நீதிமோகன் உடல்நலக் குறைவுடன் காணப்பட்டதால், அவரை திருவாரூருக்கு அழைத்துவந்து, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், தப்பிச் சென்ற கடத்தல்காரர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com