திருவாரூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம்?

திருவாரூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், மீண்டும்

திருவாரூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடராமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை தேவை எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூரில் கடைவீதி, நேதாஜி சாலை, பனகல் சாலை, தேரோடும் வீதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சாலைகள், வணிக நிறுவனங்களாலும், அப்பகுதியில் குடியிருப்போர்களாலும் பெருமளவு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, கடைவீதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், தங்களது நிறுவனத்திலிருந்து சாலை இருக்கும் இடம் வரை, சிமென்ட் மேடைகளை, அனுமதி பெறாமலேயே அமைத்திருந்தன. இந்த சிமென்ட் மேடைகள், சாலையைவிட சற்று உயரமாகவே இருந்தன. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகமாகும்போது, சாலையிலிருந்து வாகனங்கள் ஓரப்பகுதிகளில் இறங்கிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல், சில இடங்களில் வணிக நிறுவனங்களின் ஓரத்தில் சென்ற கழிவுநீர் கால்வாய் மூடப்பட்டு, கழிவுநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இதுகுறித்து, பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. 
இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பாக திருவாரூர் நகராட்சி நிர்வாகம் ஆக்கிரப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டது. முன்னதாக, ஆக்கிரமிப்புகள் செய்துள்ள வணிக நிறுவனங்கள், தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும், இல்லாதபட்சத்தில் ஆக்கிரமிப்புகள் நகராட்சி சார்பில் அகற்றப்பட்டு, அதற்குரிய தொகை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சிமென்ட் மேடைகளே அதிக ஆக்கிரமிப்புகள்...
பெரும்பாலானவை, சிமென்ட் மேடைகள் என்பதால், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தாமதம் ஏற்பட்டது. நேதாஜி சாலையில், வணிக நிறுவனங்களால் மூடப்பட்டிருந்த கழிவுநீர் கால்வாய் மீட்கப்பட்டது. கடைவீதியில் சாலையோரக் கடைகள் அகற்றப்பட்டு, தெருவோரங்களில் விளம்பரப் பதாகைகள் வைக்கவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான இடங்கள் சிமென்ட் மேடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததால், இரண்டு நாள் என அறிவிக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புப் பணிகள், சுமார் ஒரு வார காலத்துக்கு நடைபெற்றது. 
இடையூறாக விளம்பரப் பதாகைகள்...
ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு, மீண்டும் ஆக்கிரப்புகள் செய்யாமல் இருப்பதற்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆக்கிரமிப்புகள் ஆங்காங்கே மீண்டும் செய்யப்பட்டு வருகின்றன. கடைவீதிகளில், தள்ளுவண்டி விற்பனையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இதனால், கடைவீதிகளில் பாதசாரிகளும், பொருள்கள் வாங்க வருவோரும் செல்வதற்கு மீண்டும் இடையூறு ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல, திருமணம், காதணி விழா உள்ளிட்ட விழாக்களின்போதும், புதிய திரைப்படம் வெளிவரும்போதும் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக விளம்பரப் பதாகைகள் வைக்கப்படுகின்றன. மேலும், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு நிறுவனங்களுக்கு முன்பாக வைக்கப்படும், இந்த பதாகைகளால், சம்பந்தப்பட்ட இடங்களில் வசிப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
இதேபோல், நேதாஜி சாலையில் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, கழிவுநீர் கால்வாய் தோண்டப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரை கழிவுநீர் கால்வாயை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான, எவ்வித நடவடிக்கையும் நகராட்சி சார்பில் செய்யப்படவில்லை. இதனால், அந்த கால்வாய், சில இடங்களில் தூர்ந்து வருகிறது. 
மேலும், அந்த கால்வாயானது, வணிக நிறுவனங்களின் ஓரத்தில் இருப்பதால், தற்காலிக பாதைகளை ஏற்படுத்தி தங்களது கடைகளுக்கு உரிமையாளர்கள் சென்று வருகின்றனர். அதேபோல், அங்குள்ள தட்டச்சு பயிலகத்துக்கு வரும் மாணவ, மாணவிகள் சிரமத்துடனேயே  கால்வாயை தாண்டிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த கால்வாயை நகராட்சி நிர்வாகம் என்ன செய்யப் போகிறது என்று தெரியாததால், தங்கள் கடைகளுக்கு உரிய பாதையை செப்பனிட முடியாமல் அப்பகுதியினர் தவிக்கும் சூழல் நிலவுகிறது. மழை பெய்தால், இந்த வழியாக தண்ணீரும் செல்ல முடியாமல் தேங்கி, இப்பகுதியை பயன்படுத்துவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அப்பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதி வணிகர்கள்.
மேலும், அங்குள்ள தேசியமாக்கப்பட்ட வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்கள் இருசக்கர வாகனங்களை, மண் மூடிய கால்வாயின் மேல் பகுதியிலேயே நிறுத்தி வந்தனர். தற்போது, கால்வாய் பகுதியாக தோண்டப்பட்டிருப்பதால், இருசக்கர வாகனங்களை சாலையின் ஓரத்திலேயே நிறுத்திச் செல்கின்றனர். இதனால், வங்கி இயங்கும் நேரங்களில் அங்கு பெருமளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. 
இதுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் பகவன்ராஜ் கூறியது:
ஆக்கிரமிப்புகளால், இடநெருக்கடி மட்டுமன்றி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு, செல்ல வேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, திருவாரூர் நகரப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியது அவசியமான ஒன்று. ஆக்கிரமிப்புகளை அகற்றியது, மக்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியதாக இருந்தது. எனினும் மீண்டும் ஆக்கிரமிப்புகள் நடைபெறாமல் இருக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்காமல், அப்படியே அரைகுறையாக பணிகள் முடிக்கப்பட்டதால், பொதுமக்களுக்கு மட்டுமன்றி, வணிகர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அரைகுறையான பணிகள் செய்வதற்குப் பதிலாக, இந்த பணிகளை செய்யாமல் இருந்திருந்தால், பாதிப்பு குறைவாகவே இருந்திருக்கும். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றிய இடங்களில் ஆய்வு செய்து, மீண்டும் ஆக்கிரமிப்புகள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
திருவாரூர் நகரில் ஆக்கிரமிப்புகள் நடைபெறாமல் இருக்க நிரந்தர நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி என்பது வெறும் கண்துடைப்பு என்ற எண்ணம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. அதேபோல், ஆக்கிரப்புகளை அகற்றியபிறகு மீண்டும் அதை, நகராட்சி நிர்வாகம் கண்காணிக்காது என்ற எண்ணம் வணிகர்களிடையே நிலவுகிறது. இந்த எண்ணங்களை அகற்றும் வகையில், மீண்டும் ஆக்கிரப்புகள் செய்யாமல் இருக்க, கண்காணிப்புக் குழு ஒன்றை ஏற்படுத்தி நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.


தேவை நிரந்தர நடவடிக்கை
தெற்கு வீதியில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நிகழாண்டு தேரோட்டத்தின்போது, தெற்கு வீதியில் உள்ள நிறுவனங்களுக்கு ஆதரவாக, தேரை வலதுபக்கம் திருப்பியதாலேயே, தேரானது தரையில் இறங்கியதாக சர்ச்சை நிலவுகிறது. இதேபோல், ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது தெற்கு வீதியில் சில வணிக நிறுவனங்களில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை எனவும் சர்ச்சை எழுந்தது. சாலையோர வியாபாரிகளை அகற்றுவதில் காட்டப்படும் வேகம், பெரிய நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் காட்டப்படுவதில்லை என்கின்றனர் சில சமூக ஆர்வலர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com