11 ஆவணங்களில் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: மாவட்டத் தேர்தல் அலுவலர் தகவல்

மக்களவை மற்றும் திருவாரூர் சட்டப் பேரவை இடைத் தேர்தலில் 11 ஆவணங்களில் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என மாவட்டத் தேர்தல் அலுவலர்


மக்களவை மற்றும் திருவாரூர் சட்டப் பேரவை இடைத் தேர்தலில் 11 ஆவணங்களில் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என மாவட்டத் தேர்தல் அலுவலர் த. ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவைத் தொகுதியில் 1,13,541 ஆண் வாக்காளர்களும், 1,16,384 பெண் வாக்காளர்களும், 1 இதர வாக்காளரும், மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் 1,21,747 ஆண் வாக்காளர்களும், 1,27,446  பெண் வாக்காளர்களும், 6 இதர வாக்காளர்களும், திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 1,31,879 ஆண் வாக்காளர்களும், 1,37,255 பெண் வாக்காளர்களும், 22 இதர வாக்காளர்களும், நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதியில் 1,30,902 ஆண் வாக்காளர்களும், 1,29,008 பெண் வாக்காளர்களும், 7 இதர வாக்காளர்களும் என மொத்தம் 4,98,069 ஆண் வாக்காளர்களும், 5,10,093 பெண் வாக்காளர்களும், 36 இதர வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். பொதுமக்களுக்கு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் பேரணி, கோலப் போட்டிகள், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வுப் பேரணி, ஒளியுடன் கூடிய பலூன்கள் பறக்கவிடுதல், தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்கள் ஆங்காங்கே திரையிடப்படுதல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி, வாக்குச்சாவடி மையங்களில் சிரமமின்றி அவர்கள் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 
வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்வதற்கு வாக்காளர் புகைப்படச் சீட்டை அடையாள ஆவணமாகப் பயன்படுத்த முடியாது. வாக்காளர் சீட்டு, வழிகாட்டுதலுக்காக மட்டுமே பயன்படும். எனவே, வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க செல்லும்போது வாக்காளர் புகைப்பட சீட்டுடன் வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்டுள்ள 11 வகையான ஆவணங்களான கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய பணியாளர் அடையாள அட்டை (மத்திய, மாநில அரசுகள், மத்திய, மாநில அரசுகளின் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள்), கணக்குப் புத்தகங்கள் (வங்கி, அஞ்சலகங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்டவை), வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, ஸ்மார்ட் கார்டு (தேசிய மக்கள்தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டது), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, மருத்துவ காப்பீட்டு  அட்டை (மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டது), ஓய்வூதிய ஆவணம் (புகைப்படத்துடன் கூடியது), அலுவலக அடையாள அட்டை (மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது), ஆதார் அட்டை  ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம். எனவே பொதுமக்கள், மூத்தக் குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் தேர்தல் நாளான ஏப்ரல் 18  அன்று 100 சதவீதம் தவறாமல் வாக்களிக்க வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com