பாழடைந்த காவலர் குடியிருப்புகள் சீரமைக்கப்படுமா?சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
By DIN | Published On : 04th August 2019 01:03 AM | Last Updated : 04th August 2019 01:03 AM | அ+அ அ- |

மக்களின் நண்பன், பாதுகாவலர் என்று சொல்லக்கூடிய காவல்துறையினர், தங்களின் பிறப்பிடத்தை விட்டுவிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றுகின்றனர். ஆனால், இவர்களுக்கான குடியிருப்பு பல இடங்களில் பராமரிப்பின்றி உள்ளது. அதில் ஒன்றுதான் கூத்தாநல்லூர் காவலர் குடியிருப்பு.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டத்திலிருந்து பிரித்து, கூத்தாநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படும் என கடந்த 2016-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 16-ஆ ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம், குடவாசல், மன்னார்குடி, திருவாரூர் ஆகிய வட்டங்களைச் சீரமைத்து, 55 வருவாய் கிராமங்களைக் கொண்டு கூத்தாநல்லூர் வட்டம் உருவாக்கப்பட்டது. ஜெயலலிதா இறக்கும் முன்பாக கடைசியாக உருவாக்கப்பட்ட வட்டம் கூத்தாநல்லூர் வட்டமாகும்.
இந்த வட்டத்தில், கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் என இரண்டு காவல் நிலையங்கள் உள்ளன. இதில், கூத்தாநல்லூர் காவலர்களுக்காக மட்டும் காவலர் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. ஆய்குடி ஊராட்சிக்குள்பட்ட வெண்ணாற்றங்கரையின் ஓரத்தில்,14 காவலர்களுக்கான குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த குடியிருப்புகள் 1972-ஆ ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த மு. கருணாநிதியால் அமைக்கப்பட்டது.
இந்தக் குடியிருப்பில் இரண்டுஇரண்டு வீடுகளாக 6 வீடுகளும், காவலர் குடியிருப்பின் தொடக்கத்திலும், கடைசியிலும் தனித்தனியாக இரண்டு வீடுகளுமாக மொத்தம் 14 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. முதல் வீடு ஆய்வாளருக்கும், கடைசி வீடு உதவி ஆய்வாளருக்கும் ஒதுக்கப்பட்டது. காவலர்கள் உடற்பயிற்சி செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பாழடைந்த குடியிருப்புகள்: தற்போது, இந்தக் குடியிருப்புகள் பராமரிப்பின்றி பாழடைந்துள்ளன. இங்கு, அப்பகுதியில் சுற்றித்திரியும் ஆடுகளும், மாடுகளும், நாய்களும் இளைப்பாறுகின்றன. இந்தக் காவலர் குடியிருப்பில், சுந்தரமூர்த்தி என்ற உதவி ஆய்வாளர் மட்டும் நீண்ட காலமாக குடியிருந்தார். அவரும் காலமாகி விட்டார். தற்போது, அவர் இருந்த குடியிருப்புக்கு அருகிலேயே, அவரது மனைவி மாட்டுத் தொழுவத்தை அமைத்து மாடுகளைக் கட்டி, அவர் இருந்த காவலர் குடியிருப்பை மட்டும் பராமரித்து வருகிறார். இக்குடியிருப்பின் பின்பக்கத்தில், ஓடும் வெண்ணாற்றங்கரை வரையிலும் கருவேல மரங்கள் மண்டிக்கிடக்கின்றன. இதனால், இந்தக் குடியிருப்புகள் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் வாழ்விடமாக மாறியுள்ளது.
கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமைக் காவலர் உள்ளிட்ட 17 காவலர்களும் வாடகை வீட்டிலிருந்தும்,திருவாரூரிலிருந்தும் பணிக்காக தினமும் வந்து செல்கின்றனர். அவர்களுக்கான காவலர் குடியிருப்பை சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர, காவல் துறையை தன்வசம் வைத்திருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றச் செயலாளர் சக்தி எஸ்.செல்வராஜ் கூறியது:
இங்குள்ள காவலர் குடியிருப்பை உடனடியாக பழுது பார்த்து, பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவதற்கு முன்பு கடைசியாக உருவாக்கிய கூத்தாநல்லூர் வட்டத்தில், பழுதடைந்துள்ள காவலர் குடியிருப்பை தமிழக முதல்வர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தங்களது வீடுகளையும், சொந்தங்களையும் விட்டுவிட்டு, பணியாற்ற வரும் காவலர்களுக்கான குடியிருப்புக்கூட இல்லாமல், வாடகை வீட்டில் வசிப்பது சங்கடமாக உள்ளது என்றார்.