வீடு, கோயிலில் பூட்டை உடைத்து நகை திருட்டு
By DIN | Published On : 04th August 2019 01:02 AM | Last Updated : 04th August 2019 01:02 AM | அ+அ அ- |

திருவாரூர் அருகே வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து நகை, வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டுள்ளது சனிக்கிழமை தெரிய வந்தது.
திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பன் ஊராட்சிக்குள்பட்ட காவனூர், அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (39). விவசாயியான இவர், கடந்த மாதம் புதிதாக வீடு கட்டி, குடி புகுந்துள்ளார்.
இந்நிலையில், காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக, குடும்பத்துடன் வியாழக்கிழமை சென்றுள்ளார். தரிசனம் முடித்துவிட்டு, சனிக்கிழமை காலை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். அத்துடன், பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 5,000 ரொக்கம் உள்ளிட்டவை திருட்டு போய் விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், கொரடாச்சேரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோயிலில் திருட்டு...
முத்துப்பேட்டை அருகே மாரியம்மன் கோயிலில் மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்றனர்.
முத்துப்பேட்டை காவல் சரகம் க ற்பகநாதர்குளம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 2.5 சவரன் நகைகள் மற்றும் கோயில் நிலம் தொடர்பான ஆவணங்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து, கோயில் நிர்வாகி நேதாஜி அளித்த புகாரின் பேரில், முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.