குடிமராமத்துப் பணிகளை விரைந்து நிறைவேற்ற அறிவுறுத்தல்

குடிமராமத்துப் பணிகளை விரைவாக மேற்கொள்ள, பாசனதாரர் சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

குடிமராமத்துப் பணிகளை விரைவாக மேற்கொள்ள, பாசனதாரர் சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்தார். 
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி மற்றும் கோட்டூர் ஒன்றியப்பகுதிகளில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளை, திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் தெரிவித்தது:
தமிழகத்தில் நீர் ஆதாரங்களை செம்மைப்படுத்தி, விவசாயிகள் பயன்பெறும் வகையில் குடிமராமத்து திட்டம் தமிழக அரசால்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆறுகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாருதல், பழுதடைந்த கட்டுமானங்களை சீரமைத்தல், அடைப்பு பலகைகளை புதுப்பித்தல் உள்ளிட்ட  பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
இக்குடிமராமத்துப் பணிகள் மூலம்  பயன்பெறும் விவசாயிகளால், பாசனதாரர் சங்கம் அமைக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. பணியின் திட்ட  மதிப்பீட்டில்  90 சதவீதம் அரசு நிதியும், 10 சதவீதம் விவசாயிகளின் பங்களிப்போடு குடிமராமத்துப்பணிகள் நடைபெற்று  வருகின்றன.
திருவாரூர் மாவட்டத்தில், 95 குடிமராமத்துப் பணிகள் ரூ.16 கோடியே 4 லட்சத்து 15  ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் தரமானதாக உள்ளதா  என்பதை திருச்சியில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையம் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. குடிமராமத்து  திட்டத்தின் கீழ் நடைபெறும் 95 பணிகளில் ஒவ்வொரு பணியும் 30 சதவீதம் முதல் 40 சதவீதம்  நிறைவடைந்துள்ளன. பணிகளை மேற்கொண்டுவரும் பாசனத்தாரர் சங்கங்களுக்கு இந்த வாரத்தில் பணிகளுக்கு ஏற்ப  முதல் தொகை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து பணிகளையும் விரைவாக மேற்கொள்ள  அனைத்து பாசனத்தாரர் சங்கங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக, கொரடாச்சேரி ஒன்றியம், விஸ்வநாதபுரத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் மாங்குடி வாய்க்கால் தலைப்பு மதகு கட்டுமானப் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு, பணிகள் குறித்து வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் மற்றும் பாசனத்தாரர் சங்க பிரதிநிதிகள் ஆகியோரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து வெண்ணவாசல் கிராமத்தில் ரூ.29 லட்சம் மதிப்பில் வெண்ணவாசல் வாய்க்கால் தலைப்பு மதகு புதுப்பித்தல் மற்றும் 5 கி.மீ தூரத்துக்கு வாய்க்கால் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு, பணிகளை சிறப்பாக மேற்கொள்ள பாசனத்தாரர் சங்க பிரதிநிதிகளிடம் அறிவுறுத்தினார்.
பின்னர் குலமாணிக்கத்தில் ரூ.29 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் குலமாணிக்கம் அமராவதி வாய்க்காலில் மதகு சீரமைப்பு பணிகளையும், பெரியகுருவாடி மற்றும் அமராவதி வடிகால் தூர்வரும் பணிகளையும் பார்வையிட்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியதோடு, மதகு சீரமைப்பிற்கு பயன்படுத்தப்படும் சிமெண்ட் கலவை தரமாக உள்ளதா என ஆய்வு செய்தார்.
ஆய்வுகளின்போது, வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் திருவேட்டை செல்லம், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், உதவிப் பொறியாளர் தங்கமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com