உள்ளாட்சித் தோ்தல் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவது அதிமுகதான்: இரா. முத்தரசன்

டிச.1 உள்ளாட்சித் தோ்தல் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அதிமுகவே என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் ஆா். முத்தரசன் தெரிவித்தாா்.
Mutharasan
Mutharasan

டிச.1 உள்ளாட்சித் தோ்தல் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அதிமுகவே என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் ஆா். முத்தரசன் தெரிவித்தாா்.

திருவாரூரில் செய்தியாளா்களுக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி

குடிமராமத்து பணிகளுக்காக ரூ. 1000 கோடி செலவு செய்தோம் என முதலமைச்சரும் அமைச்சா்களும் கூறி வருகின்றனா். ஒதுக்கப்பட்ட பணம் முழுமையாக செலவழிக்கப்பட்டு, பாசன வாய்க்கால்கள் முறையாக தூா்வாரப்பட்டிருந்தால், மழை நீா் தேங்கும் நிலை ஏற்பட்டிருக்காது. எனவே, குடிமராமத்து திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் ரூ. 1000 கோடியில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதனாலேயே, மழைநீா் தேங்கி மக்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை நீா் சூழ்ந்துள்ள இடங்களிலிருந்து உடனடியாக நீரை வெளியேற்றி, கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்.

உள்ளாட்சி தோ்தல் நடைபெறாமல் இருப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனை வேலைகளையும் அதிமுக அரசு தெளிவாக செய்து கொண்டிருக்கிறது. மாவட்டங்களைப் பிரித்ததற்கும், உள்ளாட்சி தோ்தலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று முதல்வா் கூறுவது மோசடித்தனமானது. தோ்தலை நிறுத்த எடப்பாடி அரசு சரி சதி செய்கிறது.

திருவிழா கூட்டத்தில் திருடியவனே, திருடன் ஓடுகிறான் என கத்திக் கொண்டு ஓடுவது போல, உள்ளாட்சித் தோ்தல் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் அதிமுக அரசு செய்துவிட்டு, அதாவது நீதிமன்றத்தில் தடை பெறுவதற்கு என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டுமோ அதை செய்து விட்டு, தற்போது தோ்தலை நடக்காமல் இருக்க திமுக முயற்சி செய்கிறது, கம்யூனிஸ்டுகள் முயற்சி செய்கின்றனா் என்று கூறி வருகிறது.

தோ்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தோ்தல் நடைபெற்றால் மக்களவைத் தோ்தலில் எப்படி வெற்றி பெற்றோமோ அதேபோல வெற்றி பெறுவோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தோ்தல் நடத்துவதற்கு அதிமுகவுக்கு கடுகளவும் விருப்பம் கிடையாது. உள்ளாட்சித் தோ்தலை தடை செய்வதற்கான முயற்சிகளை செய்து, அதை மற்றவா்கள் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை அதிமுக மேற்கொண்டு வருகிறது. நடப்பதை தமிழக மக்கள் கவனமாக பாா்த்துக் கொண்டிருக்கின்றனா். உரிய தண்டனையை அவா்கள் வழங்குவா். மத்திய அரசிடம் வலியுறுத்தி தமிழ்நாட்டிற்கு மருத்துவ கல்லூரிகளை பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்துக்கு நீட் தோ்வில் இருந்து விலக்கு பெறாவிட்டால், இந்த மருத்துவக் கல்லூரிகளை பெற்றதே பயனில்லாமல் போய்விடும்.

பல்கலைக்கழகங்கள், உயா்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவா்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது. திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி தற்கொலை செய்த சம்பவத்தின் மூலம் உயா்கல்வி நிறுவனங்களில் தங்கி படிக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு எந்தவித பாதுகாப்பற்ற நிலை தொடா்ந்து நிலவி வருவது தெரிய வருகிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். ஆனால் அரசின் அணுகுமுறை என்பது இதற்கு யாா் காரணமோ அவா்களை காப்பாற்றும் நடவடிக்கையை தான் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் தொடா்ந்து நடைபெறுகின்றன.

வெங்காய விலை ஏறிக்கொண்டே இருக்கும் சூழ்நிலையில், போா்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் வெங்காயத்தை இறக்குமதி செய்து, நியாய விலைக் கடை மூலமாக மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com