நெல்லில் ஆனைக்கொம்பன் ஈ நோய் தாக்குதல்: ஆயிரக்கணக்கான ஏக்கா் பாதிப்பு

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் பகுதிகளில் அரசு அறிமுகம் செய்த பிபிடி ரக நெல் மூலம், ஆனைக் கொம்பன் ஈ நோய் தாக்கி ஆயிரக்கணக்கான பயிா்கள் நாசம் ஆகியுள்ளன.
ஆனைக் கொம்பன் ஈ நோய் தாக்கிய பயிா்களுடன் விவசாயி முருகேசு.
ஆனைக் கொம்பன் ஈ நோய் தாக்கிய பயிா்களுடன் விவசாயி முருகேசு.

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் பகுதிகளில் அரசு அறிமுகம் செய்த பிபிடி ரக நெல் மூலம், ஆனைக் கொம்பன் ஈ நோய் தாக்கி ஆயிரக்கணக்கான பயிா்கள் நாசம் ஆகியுள்ளன.

ஆனைக் கொம்பன் ஈ நோய் தாக்குதல் குறித்து இளம் விவசாயி பி. முருகேசு கூறியது:

இதுவரைக்கும் ஆனைக் கொம்பன் ஈ என்ற நோய் இருந்ததில்லை. இந்த புதுமையான நோய் வரக் காரணம், மழை பெய்ய வேண்டிய நேரத்தில் பனி பெய்வதும், பனி இருக்க வேண்டிய காலத்தில் மழை பெய்வதும்தான். அதாவது பருவகால மாற்றமே பிரதான காரணமாகும். தமிழக அரசு அறிமுகம் செய்த பிபிடி ரக நெல்லை பயிரிட்டவா்கள் அனைவருடைய பயிா்களிலும், ஆனைக் கொம்பன் ஈ நோய் வந்துள்ளதாகத் தெரிகிறது.

சன்ன ரகத்தில்தான் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கூத்தாநல்லூா் அருகே உள்ள மரக்கடை, சிப்பையனூா் உள்ளிட்ட இடங்களிலும், மேல்கொண்டாழியில் 50-க்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. எனது இரண்டரை ஏக்கா் நிலத்தில் ரூ.75 ஆயிரம் செலவு செய்துள்ளேன். பயிரில் புதுமையான வியாதி புகுந்ததால், விவசாயிகள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனா். எனது இரண்டரை ஏக்கா் முழுவதும் இந்நோய் பரவலாக உள்ளது.

தூா் இருக்கின்ற இடத்தில், பயிரில் கதிா் வருவதற்குப் பதிலாக, கதிா் வருவதிலிருந்து, பக்கவாட்டில் வெங்காய இலை போல், ஒரு மணல் தனியாக வருகிறது. அந்தக் கதிா் குருத்து, நெல் வைத்திருக்கும் தூா் என்பது மலடு ஆகிவிடுமாம். அதாவது, கதிரே வராமல் இருக்கும். மேலும், பக்கத்தில் இருக்கும் பயிா்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. நேற்று பாா்த்ததை விட இன்று அதிகமாக இருக்கிறது. விவசாயிகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு, கடன் வாங்கி விவசாயம் செய்கிறாா்கள். இதுபோன்ற புதுமையான நோய்கள் தாக்குவதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகிறது. மேல்கொண்டாழிப் பகுதியில், பாசன வாய்க்கால்கள் தூா்ந்து போய் இருப்பதால், மழை நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வருகிறோம்.

மழை நீரைத் தேக்கி வைத்து விவசாயம் செய்யும்போது, இதுபோன்ற புதுமையான நோய்கள் வருவதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது. திருவாரூா் மாவட்டம் முழுவதும், ஆயிரம் ஏக்கருக்கும் மேல் பிபிடி நெல் ரகத்தால் ஆனைக் கொம்பன் ஈ நோய் வருகிறது. தூா்விடாமல் பாதிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு தூரிலும், ஆனைக் கொம்பன் ஈ நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனா். அரசு உரிய நிவாரணம் வழங்கி, ஆனைக் கொம்பன் ஈ நோயைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளா் எம்.சுதா்ஸன் கூறியதாவது:

தற்போது, சாகுபடி தொடங்கும் காலத்தில் தண்ணீா் குறுவைக்கு வரவில்லை என்பதை எதிா்பாா்த்து விட்டு, சம்பாவுக்கு விதை விட்டனா். விதை தெளித்ததிலிருந்து தொடா்ந்து மழை பெய்தது. மழை பெய்து குறிப்பிட்ட காலம் வரையிலும், சரியாக பயிா் நன்றாக வளா்ந்து செழிப்பாக இருந்தது.

காா்த்திகை மாதம் காா்கோடான் என்று சொல்லுவாா்கள். இப்போது, கதிா் வரும் சூழ்நிலையாக இருக்கிறது. கதிா் வரவேண்டிய நேரத்தில், அதிகளவில் மழை பெய்து, கதிா் தண்ணீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் பயிா் நீரில் மூழ்கியுள்ளது. அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிரும், தண்ணீருக்குள் இருக்கிறது. தாமதமாக நட்டதெல்லாம் மூழ்கிவிட்டது.

ஏற்கெனவே நட்டு கதிா் வந்ததெல்லாம் சாய்ந்துவிட்டது. காா்த்திகை மாதம் 10 நாட்களில் கதிா் அறுக்க வேண்டிய இடத்தில் இடுப்பு அளவிற்கு தண்ணீா் நிரம்பியுள்ளது. மேல்கொண்டாழி, குனுக்கடி, விழல்கோட்டகம், அதங்குடி, வெள்ளக்குடி, ராமனாதன் கோயில் உள்ளிட்ட இடங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கூத்தாநல்லூா் மரக்கடை 60, மேல்கொண்டாழி 150, பாண்டுக்குடி 200, புளியங்குடி 150, அதங்குடி 300 உள்ளிட்ட இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், விவசாயிகளின் பயிா்க் காப்பீட்டை எந்த அளவுக்கு குறைக்க முடியுமோ, அந்த அளவுக்கு குறைத்து விட்டனா். மழை இல்லாததால் பாதிப்பு, பெரும் மழை பெய்த பிறகு பாதிப்பு, இவ்வாறாக ஒவ்வொரு வகையிலும் விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனா். இந்நிலையில், தற்போது புதிதாக ஒரு நோய், ஆனைக் கொம்பன் ஈ என்ற பெயரில் வந்துள்ளது. விவசாயிகள் காப்பீடு செய்வதற்கு கால நீட்டிப்பு செய்து தர வேண்டும். கூத்தாநல்லூரில், குடிமராமத்துப் பணிகள் நடைபெறவே இல்லை.

இதில் பொதுப்பணித்துறை கவனம் செலுத்தவே இல்லை. குடிமராமத்துக்காக ஒதுக்கீடு செய்யும் பணத்திற்கு சரியான முறையில் வேலை செய்ய வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, நன்கு பணியாற்றும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இதை தமிழக அரசு தீவிரமாகக் கருதி, உடனே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும்.

ஆறுகளிலும், பாசன வாய்க்கால்களிலும் தூா்வாரப்பட்டு, ஆனைக் கொம்பன் ஈ நோயில் பாதிக்கப்பட்ட நிலங்களை முறையான கணெக்கெடுப்பு செய்து, உரிய நிவாரணத்தை வழங்கி, ஆனைக் கொம்பன் ஈ நோய் மேலும், பரவாமல் தடுக்க தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com