திருவாரூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

திருவாரூர் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைமேடைகளிலும் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி

திருவாரூர் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைமேடைகளிலும் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூருக்கு திங்கள்கிழமை வந்த தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே. குல்ஸ்ரஷ்தாவிடம், திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கத் தலைவர் ஆர். தெட்சிணாமூர்த்தி, திருவாரூர் மாவட்ட வளர்ச்சி குழும பொறுப்பாளர் தெ. கார்த்திக், திருவாரூர் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சங்க நிர்வாகி ரமனேஸ்வரன் உள்ளிட்டோர் ரயில்வே தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். 
மனுவிவரம்: தேசிய நெடுஞ்சாலை 67-இல் அமைந்துள்ள நீடாமங்கலம் ரயில்வே கேட் 30 நிமிடங்களுக்கு மேலாக காலை, மாலை வேளைகளில் மன்னார்குடி, கோயம்புத்தூர் ரயில்களுக்காக மூடப்படுவதால் திருவாரூர் தஞ்சை சாலையில் பயணிக்கும் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. 
எனவே, அந்த ரயிலின் என்ஜின் மாற்றும் வசதியை திருவாரூருக்கு மாற்ற வேண்டும். மேலும், திருவாரூரில் இருந்து திருச்சிக்கு காலை 8 மணிக்கு முன்பாகவும், திருச்சியிலிருந்து திருவாரூருக்கு மாலை 4 மணிக்கு பிறகும் ரயில் வசதி செய்து தர வேண்டும், மயிலாடுதுறை - விழுப்புரம் ரயிலை, நாகூர் மற்றும் காரைக்குடி வரை நீட்டிக்க வேண்டும்,  நாகூர் கொல்லம் ரயிலை உடனடியாக இயக்க வேண்டும், நாகர்கோவில் - வேளாங்கண்ணி, கொல்லம் - வேளாங்கண்ணி வாரம் ஒருமுறை ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும். 
வரலாற்று சிறப்பு பெற்ற திருவாரூர் ரயில்வே சந்திப்பு நிலையத்தில் சிறப்பான முகப்பு வளைவு ஏற்படுத்த வேண்டும், திருவாரூர் ரயில் நிலையத்தில் இரண்டாம் மேடையை உயர்த்த வேண்டும், இதேபோல் அனைத்து  நடைமேடைகளிலும் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், பாதுகாப்பான இருசக்கர வாகன பாதுகாப்பு காப்பகத்தை ஏற்படுத்தி தர வேண்டும், மேலும் திருவாரூர் ரயில்வே நிலையம் அருகிலுள்ள மில் தெருவைச் சேர்ந்த மக்கள் ரயில்வே கிராசிங்கை கடந்து செல்ல பாதை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com