ராகு- கேது பெயர்ச்சி: திருப்பாம்புரத்தில் இன்று பூஜைகள் தொடக்கம்

ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரத்தில் சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை (பிப். 12) தொடங்குகின்றன. 

ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரத்தில் சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை (பிப். 12) தொடங்குகின்றன. 
 ராகு-கேது பெயர்ச்சி பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெறுகிறது. அதாவது, விளம்பி ஆண்டு மாசி 1-ஆம் தேதி பிற்பகல் 2.02 மணிக்கு ராகு பகவான் கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கும், கேது பகவான் மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கும் இடம் பெயர்கின்றனர். இந்த பெயர்ச்சி காரணமாக ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதையொட்டி, திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே திருப்பாம்புரத்தில் உள்ள வண்டுசேர்குழலி உடனுறை அருள்மிகு சேஷபுரீசுவரர் கோயிலில், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
இங்கு ராகுவும், கேதுவும் தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளனர். ராகு காலங்களில் இந்த சன்னிதியில் அபிஷேகம், அர்ச்சனை செய்வோருக்கு தோஷங்கள் விலகி, நலம் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே, சேஷபுரீசுவரர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பெயர்ச்சி நாளில் திரளான பக்தர்கள் கோயிலுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
எனவே, ராகு-கேது சன்னதியில் நெரிசலின்றி சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பெயர்ச்சியானது, பிற்பகல் நேரம் என்பதால் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு அருகிலேயே குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வாகனங்கள் நிறுத்துவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
ராகு- கேது பெயர்ச்சியையொட்டி செவ்வாய், புதன், வியாழக்கிழமை ஆகிய 3 நாள்களும் யாகம், அபிஷேகம், அர்ச்சனை ஆகியவை நடைபெற உள்ளன. செவ்வாய்க்கிழமை தொடங்கும் முதல் கால பூஜையில் விக்னேஷ்வர பூஜை, சங்கல்ப ஹோமம்,  மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறவுள்ளன. புதன்கிழமை இரண்டாம் கால பூஜையில் சிறப்பு பரிகார ஹோமம், மகா பூர்ணாஹுதி ஆகியவை நடத்தப்பட்டு, பெயர்ச்சி நேரமான 2.02 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட உள்ளது. வியாழக்கிழமை ஏகதின லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com