அமைதி ஊர்வலத்தில் பங்கேற்கச் சென்ற 145 பேர் கைது

தஞ்சை மாவட்டம் திருப்புவனத்தில் நிகழ்ந்த பாமக பிரமுகர் கொலை சம்பவத்தைக் கண்டித்து

தஞ்சை மாவட்டம் திருப்புவனத்தில் நிகழ்ந்த பாமக பிரமுகர் கொலை சம்பவத்தைக் கண்டித்து, கும்பகோணத்தில் அறிவிக்கப்பட்டிருந்த அமைதி ஊர்வலத்தில் பங்கேற்க சென்ற பாஜகவினர் 40 பேர் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலும், நாகை மாவட்டம் மயிலாடுதுறை தடையை மீறி பேரணியாக சென்ற இந்து அமைப்பினர் 105 பேர் என மொத்தம் 145 பேரை போலீஸார் கைது செய்தனர். 
மன்னார்குடியில்: தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தில் வாடகை பாத்திரக் கடை நடத்தி வந்த பாமக பிரமுகர் வ. ராமலிங்கம் (48) கடந்த 5 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தைக் கண்டித்து, செவ்வாய்க்கிழமை தஞ்சை மாவட்டம் முழுவதும் கடையடைப்பும், கும்பகோணத்தில் அமைதி ஊர்வலமும் நடைபெறும் என பாஜக, இந்து அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தன. இதில் பங்கேற்பதற்காக, பாஜக மாநிலப் பொதுச் செயலர் கருப்பு எம். முருகானந்தம், திருவாரூர் மாவட்டத் தலைவர் பேட்டை சிவா, மாவட்ட பொதுச் செயலர் வி.கே. செல்வம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஞானம். ரவிச்சந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் 10-க்கும் மேற்பட்ட கார்களில் முத்துப்பேட்டையிலிருந்து புறப்பட்டு மன்னார்குடி வழியாக கும்பகோணத்துக்கு சென்றனர். 
இவர்கள் சென்ற காரை, மன்னார்குடி மேலப்பாலம் அருகே மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜான்ஜோசப், முத்துப்பேட்டை டிஎஸ்பி இனிக்கோ திவ்யன், மன்னார்குடி காவல் ஆய்வாளர் ஏ. கண்ணன் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தி, கடையடைப்பு மற்றும் அமைதி ஊர்வலகத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கவில்லை என தெரிவித்து, கும்பகோணம் செல்லக் கூடாது, எனவே திரும்பி செல்லுமாறு பாஜகவினரிடம் தெரிவித்தனர். இதை ஏற்காமல் அவர்கள், காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினரை கண்டித்தும், கொலையின் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து, அனைவரையும் கைது செய்வதாக கூறி கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மயிலாடுதுறையில்: இதேபோல், பாமக பிரமுகர் ராமலிங்கத்தின் படுகொலையை கண்டித்தும், மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வர வலியுறுத்தியும் நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் இந்து அமைப்புகள் சார்பில் செவ்வாய்க்கிழமை கடையடைப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி நகரின் அனைத்துப் பகுதிகளிலும் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட கடைகள் மதியம் 12 மணி வரை அடைக்கப்பட்டு இருந்தன. தொடர்ந்து, இந்து அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த அமைதிப் பேரணியை நடத்த போலீஸார் அனுமதி மறுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
எனினும், பாஜக மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி இணை அமைப்பாளர் க. அகோரம் தலைமையில், மாவட்ட தலைவர் வெங்கடேசன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் கே. ராஜேந்திரன், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி அமைப்பாளர் கோவி. சேதுராமன், மாவட்ட பொதுச் செயலர்கள் நாஞ்சில். பாலு, அமிர்த. விஜயகுமார், நகர தலைவர் மோடி. கண்ணன், மாவட்ட ச் செயலர் செந்தில்குமார், விஸ்வஹிந்து பரிஷத் மாநில துணைத் தலைவர் வாஞ்சிநாதன், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த நாராயணன் உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், மயிலாடுதுறை முதலியார் தெருவில் உள்ள பாஜக அலுவலத்திலிருந்து, பேரணியாக செல்ல முயன்றனர். 
இதையடுத்து, போலீஸார் பேரணிக்கு தடை விதித்தனர். இருப்பினும் தடையை மீறி சிறிது தூரம் பேரணியாக சென்ற இந்து அமைப்பினர் ஒரு பெண் உள்ளிட்ட 105 பேரை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com