பொங்கல் பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் தடுக்கப்படுமா?

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில், இரண்டு மடங்கு கட்டணம் நிர்ணயித்து, முன்பதிவு செய்யப்படுவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னையில்  அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்கள், மாணவர்கள், சொந்த தொழில் செய்வோர் என பல்வேறு தரப்பினரும், பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் உறவினர்களுடன் கொண்டாடவே விரும்புவர்.
இதனால், சொந்த ஊருக்குச் செல்ல ரயிலில் டிக்கெட் கிடைக்காதவர்கள், பெரும்பாலும் ஆம்னி பேருந்துகளைத்தான் நம்புகின்றனர். கடந்த தீபாவளி பண்டிகையின்போது, ஆயிரக்கணக்கான தொலைதூரப் பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகம் இயக்கியபோதும், அதற்கு இணையாக ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டன.
அப்போது, அரசு தரப்பில் போக்குவரத்துத் துறை அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் தடுத்ததுடன், கூடுதல் கட்டணம் வசூலித்த சில ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், பொங்கல் பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை இரண்டு மடங்கு உயர்த்தியதுடன், இணையதளம் மூலமாக முன்பதிவையும் செய்து முடித்து விட்டனர்.
உதாரணமாக சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ. 1,000 கட்டணத்துக்கு ரூ.1,800 வசூலித்துள்ளனர். இதேபோல்,  திருச்சிக்கு ரூ. 800-க்கு ரூ.1600-ம், தஞ்சாவூருக்கு ரூ. 800-க்கு ரூ.1,400-ம், கும்பகோணம் செல்ல ரூ 700-க்கு ரூ.1,400-ம், வேளாங்கண்ணிக்குச் செல்ல ரூ. 800-க்கு ரூ.1600-ம், திருநெல்வேலிக்குச் செல்ல ரூ.1,200-க்கு ரூ.2,200-ம், தூத்துக்குடிக்குச் செல்ல ரூ.1,100-க்கு ரூ.2,000-ம், திருவாரூருக்குச் செல்ல ரூ.800-க்கு ரூ.1,300- ம் என கட்டணமாக இணையதளங்கள் மூலமாக அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆன்லைன் மூலமாக முன்பதிவை முடித்துவிட்டனர். இந்தக் கட்டணத்துடன் முன்பதிவுக் கட்டணம் மற்றும் சேவை வரிகள் வேறு.இந்த கட்டணக் கொள்ளையால்,  பலர் குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்...
திரையரங்குகளின் கட்டணங்களை அரசு ஒழுங்குப்படுத்துவது போல், ஆம்னி பேருந்து கட்டணத்தையும் நிர்ணயம் செய்ய வேண்டும். இதுகுறித்து, உயர்நீதிமன்றம் கடுமையான கண்டனங்களை தெரிவித்து, எச்சரித்தபோதும் கட்டணக் கொள்ளை தொடர்கிறது. 
எனவே, தமிழக அரசு கடந்த ஆண்டைப்போல், நிகழாண்டிலும் போக்குவரத்துத் துறை அலுவலர்களைக் கொண்டு சென்னை மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆய்வு நடத்தி, ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளையைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com