பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா பாரம்பரியதைப் போற்றும் வகையில்


திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா பாரம்பரியதைப் போற்றும் வகையில் வெள்ளிமற்றும் சனிக்கிழமையில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. 
பேரளம் ஸ்ரீ சங்கரா பள்ளியில்...
பேரளம் ஸ்ரீ சங்கரா பள்ளியில் கும்மிப்பாட்டு, உரியடி விழா, கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா நடைபெற்றது. தமிழர்களின் பண்பாடு, தமிழ்குலப் பெண்களின் சீரிய திறமைகள் மற்றும் பொங்கல் பண்டிகையின் நோக்கங்கள், கொள்கைகள் குறித்து ஆசிரியர்கள் பேசினர். மேலும், விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு தாளாளர் ஜி. வெற்றிச்செல்வம் பரிசுகளை வழங்கினார். இதில் பள்ளியின் இயக்குநர் ஏ. சுகுமார் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
இராபியம்மாள் கல்லூரியில்... 
இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரியில் தமிழ்த் துறை சார்பில் சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அனைத்துத் துறை பேராசிரியர்களும், மாணவிகளும் இணைந்து துறைவாரியாக பொங்கல் வைத்தனர். முன்னதாக, கல்லூரி அறங்காவலர் குழு உறுப்பினர் பெரோஸ் ஷா, கல்லூரி முதல்வர் எஸ். ஸ்ரீதேவி ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர். 
பின்னர் பாரம்பரிய விளையாட்டுக்களான உரியடித்தல், கபடி, பாண்டி, நாடு பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்கள் நடைபெற்றன. மேலும் மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 
அடியக்கமங்கலம்
பள்ளியில்...
அடியக்கமங்கலம் அரசு மேல் நிலைப்பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா மற்றும் அனைத்து மன்றங்களின் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தலைமை ஆசிரியர் முருக பூபதி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அனைத்து மன்றப் பொறுப்பாளர்களும், மாணவர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். நிகழ்ச்சியில் தமிழ் மன்றத் தலைவர் சந்தான லெட்சுமி பங்கேற்று, உணவும் படையலும் தமிழனின் அடையாளம்' எனும் தலைப்பிலும், நுகர்வோர் மன்ற நெறியாளர் தமிழ்க் காவலன் உணவு உற்பத்தியும், பதப்படுத்துதல் தொழில் நுட்பமும்' எனும் தலைப்பிலும் பேசினர். இதில் இளையோர் செஞ்சிலுவை சங்க நெறியாளர் சுரேஷ்ராஜ், தேர்தல் கல்விக் குழு அமைப்பாளர் விஜய் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
எண்ணக்குடி
அரசுப் பள்ளியில்... 
திருவாரூர் அருகே உள்ள எண்ணக்குடி அரசு தொடக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமத்துவப்பொங்கல் விழாவுக்கு பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் கோ. ராமதாஸ் தலைமை வகித்தார். இதில் தலைமை ஆசிரியை கோ. பூங்குழலி, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் கோவிந்தராஜ், கமலா, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல், செங்கரும்பு, பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
கஸ்தூர்பா காந்தி பள்ளியில்...
திருவாரூர் கஸ்தூர்பா காந்தி கல்வி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு பள்ளித் தாளாளர் சந்திரா முருகப்பன் தலைமை வகித்தார். மாணவர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி கொண்டாடப்பட்ட இவ்விழாவில், நிர்வாக அறங்காவலர் க. முருகப்பன், செயலாளர் எம். இன்பராஜ், துணை முதல்வர் மலர்விழி இன்பராஜ், நிர்வாக மேலாளர் வீ. சின்னராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாரம்பரிய உடையில்...
மன்னார்குடி எஸ்பிஏ மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் பி. ரமேஷ் தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
இதில், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவியர் என அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனர். பள்ளி நிர்வாகி ஆர்.அனிதா, முதல்வர் யு. தமிழ்ச்செல்வன், கல்வி ஆலோசகர் வி. சாந்தி, ஒருங்கிணைப்பாளர் ஐ. பாமா உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதேபோல், ஸ்ரீசண்முகா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் ஆர்.எஸ். செந்தில்குமார், பள்ளி நிர்வாகி எஸ். சண்முகராஜா ஆகியோர் தலைமை வகித்தனர். ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து பொங்கலிட்டு சூரிய வழிபாடு நடத்தினர். பின்னர், அனைவருக்கும் சக்கரைப் பொங்கல், வெண் பொங்கல் வழங்கப்பட்டது. பொங்கல் திருநாள்' என்ற தலைப்பில் ஆசிரியர் பூபதி பேசினார். கலை நிகழ்ச்சிகள் மற்றும் கோலப் போட்டிகள் நடைபெற்றன. இதில், பள்ளி முதல்வர்கள் ஏ.அருள்ராஜா, சாந்தி, பள்ளி ஆலோசகர் இ.வி.பாண்டியன், பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல், ஸ்ரீபாரதிதாசன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் கி.அன்பழகன் தலைமை வகித்தார். ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து பொங்கல் வைத்தனர். பின்னர், கும்மிப்பாட்டு, கோலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் ஜெ. அசோகன், நிர்வாக அலுவலர் என்.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சூரிய வழிபாடு...
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலக்கொருக்கை சாய் ஸ்ரீனிவாஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவை திருத்துறைப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராப் பங்கேற்று தொடங்கிவைத்தார். இதில், பள்ளி நிறுவனர் டாக்டர் புஷ்பா , தாளாளர் கிருஷ்ணகுமார், மக்கள் தொடர்பு அலுவலர் பிரபாகரன் , உடற்கல்வி ஆசிரியர் முத்துகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் , மாணவ- மாணவியர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்குப் படைத்து, வழிபாடு நடத்தப்பட்டது. இதேபோல், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் டி. சிவக்குமார் தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
சிறப்புப் பட்டிமன்றம்
 வலங்கைமான் ஒன்றியம், தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவியருக்கு இடையே பொங்கலுக்கு சிறப்பு சேர்ப்பது கரும்பு, மஞ்சளா? பொங்கும் பொங்கலா?' என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.
ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் நடுவராக செயல்பட்டார். இதில், பொங்கும் பொங்கலே என்ற அணியில் நிகிதா, ஜெகதீஸ்வரி, காவியா ஆகியோர் பேசினர். கரும்பு, மஞ்சளே என்ற அணியில் சாருணிகா, விஷ்ணுபிரியா, சுபஸ்ரீ ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியை விஜயகுமாரி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி, ஆசிரியர் ராமமூர்த்தி, இளையராஜா, ரேணுகா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா...
குடவாசலில் உள்ள டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி முதல்வர்(பொ) அ. ஜான்பீட்டர் தலைமையில் வெள்ளிக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. 
விழாவில், பாரம்பரிய உடையணிந்து பொங்கலிட்டனர். மேலும் வண்ணக்கோலமிடுதல், கபடி, வளைப்பந்து உள்ளிட்ட போட்டிகளும், நாட்டுப்புறப் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் பேராசிரியர் வே. ரமேஷ்குமார், உடற்கல்வி இயக்குநர் க. புவனேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com