போக்குவரத்துக்கு இடையூறான குப்பைத் தொட்டி: பொதுமக்கள் அவதி

திருவாரூர் நேதாஜி சாலையில் உள்ள குப்பைத் தொட்டியால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன்,

திருவாரூர் நேதாஜி சாலையில் உள்ள குப்பைத் தொட்டியால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே, இந்த குப்பைத் தொட்டியை இடையூறு இல்லாத இடத்தில் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் நேதாஜி சாலையில் உள்ள வணிக நிறுவனங்கள், தங்களுக்கு எதிரே உள்ள இடங்களில் மேடை போன்ற அமைப்பை ஏற்படுத்தி, ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன. இதனால், சாலையானது குறுகலாக மாறி வருகிறது. போக்குவரத்து அதிகரிக்கும் போது, இருசக்கர வாகனங்கள் சாலையிலிருந்து இறங்கி ஓரத்தில் உள்ள வெற்றிடம் வழியாக செல்ல முடியாதபடியும், இருசக்கர வாகனங்களை அங்கு நிறுத்த முடியாத நிலையும் ஏற்படுகிறது. இதனால், அண்மை காலமாக போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படத்  தொடங்கியுள்ளது. 
இதுதவிர, இந்த ஆக்கிரமிப்புகள் நகராட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. சாலையோரங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்க இடமில்லாமல் சிரமப்பட வேண்டியுள்ளது. நேதாஜி சாலையில் கிறிஸ்தவ ஆலயத்தின் ஓரத்தில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக குப்பைத்தொட்டி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்பகுதிகளின் ஓரங்களில் சற்று உயர்த்தப்பட்டு மேடை போன்று ஏற்படுத்தப்பட்டிருப்பதால், குப்பைத் தொட்டியை வைக்க இடமில்லாமல், சாலைக்கு வந்து விட்டது. 
 குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இவைகள் தங்களது கொள்முதல் பொருள்களை லாரிகளில் ஏற்றி வந்து, இறக்குவது வழக்கம். ஆனால், சாலையில் குப்பைத் தொட்டி இருப்பதால் லாரிகளை அங்கு கொண்டு வருவது சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதுமட்டுமல்லாமல், அங்கிருந்து குப்பைகளை அள்ளிச்செல்லும் நகராட்சி வாகனம் அந்த இடத்தில் நின்று குப்பைகளை அள்ளும்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால், அவசர அவசரமாக குப்பைகளை அள்ளிச் செல்கிறது. இதனால், அரைகுறையாக குப்பைகளை அள்ளிவிட்டு, பாதி குப்பைகளை அங்கேயே விட்டுச் செல்கின்றனர். இதனால், சாலையில் சிதறும் குப்பைகள், மக்களின் சுகாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை ஏற்படுகிறது.
கண்டுகொள்ளுமா நகராட்சி...
எனவே, அந்த குப்பைத் தொட்டியை பாதிப்பில்லாத இடத்தில் வைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும், நகராட்சி சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், மக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையிலேயே நகராட்சி வண்டிகளும் குப்பைகளை அள்ளிச் செல்லும் சூழல் ஏற்படுகிறது. 
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. கடைவீதிகளுக்குள் வாகனங்களில் செல்ல விரும்பாதவர்கள், நேதாஜி சாலையில் வாகனங்களை நிறுத்திச் செல்வது வழக்கம். ஆனால், ஆக்கிரமிப்பு காரணமாக சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்த முடியவில்லை. இந்த குப்பைத் தொட்டி காரணமாக போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பெரிய அளவிலான பாதிப்புகளை வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும், வணிகர்களும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, குப்பைத் தொட்டியை சரியான இடத்தில் வைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com