திருவாரூர்-காரைக்குடி ரயில் சேவை இன்று தொடக்கம்

திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் சனிக்கிழமை (ஜூன் 1) முதல் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் சனிக்கிழமை (ஜூன் 1) முதல் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில், அகல ரயில் பாதை பணிகளுக்காக 2012- இல் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பணிகள் நிறைவடைந்த நிலையில், ரயில் சேவை தொடங்கப்படாமல் இருந்தது. 
எனவே, திருவாரூர்- காரைக்குடி மார்க்கத்தில் ரயில் சேவையைத் தொடங்க வலியுறுத்தி, திருவாரூர் மாவட்ட ரயில்  உபயோகிப்போர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன. தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் பலமுறை புதிய ரயில் பாதைகளை ஆய்வு செய்தனர். மேலும் மார்ச் 28-ஆம் தேதி, இந்த ரயில் பாதையில் சோதனை ரயில் ஓட்டமும் நடைபெற்றது. 
எனினும், மக்களவைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, ரயில் சேவை தொடங்குவது தாமதமடைந்தது.
 இந்நிலையில், ஜூன் 1- ஆம் தேதி முதல் திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் ரயில் சேவையைத் தொடங்க உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, திருவாரூரிலிருந்து  காலை 8.15- மணிக்குப் புறப்படும் ரயிலானது, மாங்குடி, மாவூர், திருநெல்லிக்காவல், ஆலத்தம்பாடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம்,  பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி வழியாக, பிற்பகல் 2.15 மணியளவில் காரைக்குடியைச் சென்றடைகிறது. இதேபோல், மறுமார்க்கத்தில் காரைக்குடியிலிருந்து பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் ரயில், இரவு 8.30-க்கு திருவாரூர் வந்தடையும். திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இந்த ரயில் சேவை நடைபெறும். ஞாயிற்றுக்கிழமையில் திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் ரயில் சேவை
கிடையாது. 
மாறாக, அன்றைய தினம் திருவாரூரிலிருந்து திருச்சிக்கு பராமரிப்புப் பணிகளுக்குச் செல்லும் இந்த ரயில், பயணிகள் ரயிலாகச் செல்கிறது. திருவாரூரிலிருந்து காலை 4.10-க்கு புறப்படும் ரயிலானது, காலை 6.50-க்கு திருச்சி சென்றடைகிறது. பின்னர் இரவு 7.45-க்கு திருச்சியிலிருந்து புறப்படும் இந்த ரயில், இரவு 10.45-க்கு திருவாரூர் வந்தடையும்.  ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 30 வரையில் இந்த ரயில் சேவை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர்-காரைக்குடி ரயில் சேவை தொடக்கத்தை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்போர் சங்கம் சார்பில் சனிக்கிழமை காலை, விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்போர் சங்கத்தின் செயலர் ப. பாஸ்கரன் தெரிவித்தது:
திருவாரூர்-காரைக்குடி ரயில் சேவையைத் தொடங்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக, நடைமேடை 4-இல், முதல் சேவை தொடங்க உள்ளது. அனைவரும் தத்தம் நண்பர்களுடன் வருகை தர வேண்டும். அதிகாரப்பூர்வமாக ரயில்வே, இந்நிகழ்ச்சியை விழாவாகக் கொண்டாடுவது போல் தெரியவில்லை.  உயரதிகாரிகளும் கலந்துகொள்வது போல் தெரியவில்லை. 
எனவே திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்போர் சங்கத்தின் சார்பில் அனைவருக்கும் இனிப்பு வழங்க அனுமதி கேட்டபோது, கட்டாயம் அனைவரும் நடைமேடை சீட்டு வாங்க வேண்டும் என்று கூறி அனுமதியும் தந்துள்ளார். எனவே சனிக்கிழமை காலை சென்று, திருத்துறைப்பூண்டி வரை பயணச்சீட்டு வாங்க வேண்டும். ஏனெனில் நடைமேடை சீட்டும், திருத்துறைப்பூண்டி வரை பயணச்சீட்டும் ரூ. 10 மட்டுமே என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com