வர்த்தகர்கள் எதிர்ப்பு: போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மன்னார்குடியில் வர்த்தகர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்புகளை செவ்வாய்க்கிழமை அகற்றினர்.

மன்னார்குடியில் வர்த்தகர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்புகளை செவ்வாய்க்கிழமை அகற்றினர்.
மன்னார்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தனிநபர்கள், வர்த்தக நிறுவனத்தினரின் ஆக்கிரமிப்பு மற்றும் கடைகளின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோடை பந்தல் ஆகியவற்றை ஜூன் 17-ஆம் தேதிக்குள் தாங்களே முன் வந்து அகற்றிட வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் நகராட்சி நிர்வாகம் மூலம் அகற்றப்படும் எனவும், மூன்று தினங்களுக்கு முன்பாக நகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியானது. எனினும், இதற்கு பெரும்பாலானோர் உடன்பட மறுத்தனர்.
இதைத்தொடர்ந்து, திங்கள்கிழமை நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீஸார் இணைந்து மன்னார்குடி வ.உ.சி. சாலையில் ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றினர். 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை நடேசன் தெரு, சந்தைப்பேட்டை பேருந்து நிலையம், கோபாலசமுத்திரம் கீழ வீதி ஆகிய இடங்களில் இயந்திரத்துடன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி ஆணையர்
ஜி. இளங்கோவன், நகரமைப்பு ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில், நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். சந்தைப்பேட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த வர்த்தக சங்கத் தலைவர் கே.ஜெ.ஆர். பாரதி, சந்தைப்பேட்டை நகராட்சி கடை உரிமையாளர்கள் சங்க நிர்வாகி கைலை. ஊமைத்துரை ஆகியோர் தலைமையில் வர்த்தகர்கள், தங்களுக்கு மேலும் சில நாள்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
ஆயினும், நகராட்சி நிர்வாகத்தினர் ஏற்கெனவே போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் கால நீட்டிப்பு இல்லை என மறுத்தனர். இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, மன்னார்குடி காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் போலீஸார் அவ்விடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, போலீஸ் பாதுகாப்புடன், நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். தொடர்ந்து ஒரு வார காலம் நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடரும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com