புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூரில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நகல் எரிப்பு ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூரில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நகல் எரிப்பு ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், பள்ளிகளில் ஹிந்தி படிப்பை கட்டாயமாக்கக் கூடாது, புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து கூறும் கால அவகாசத்தை 6 மாதங்கள் நீட்டிப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் திருவிக அரசுக் கலைக்கல்லூரி முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவ, மாணவியர் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதுடன்,  கல்லூரி வாசல் முன்பாக புதிய கல்விக் கொள்கையின் நகலையும் எரித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் சுர்ஜித் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் சிவனேஷ்வரி, மாநில துணைச் செயலர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சட்டப்பேரவையில்
விவாதிக்க வேண்டும்...
மன்னார்குடி, ஜூன் 25: புதிய கல்விக் கொள்கையில் தமிழக அரசின் நிலைப்பாட்டை சட்டப் பேரவையில் விவாதித்து, மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.
இம்மன்றத்தின் மன்னார்குடி வட்டக் கிளை சிறப்புக் கூட்டம் கோபாலசமுத்திரம் நடுநிலை பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. கிளைத் தலைவர் செ.செல்வக்குமார் தலைமை வகித்தார். 
தீர்மானங்கள்: புதிய கல்விக் கொள்கை கருத்துக் கேட்பு கால அவகாசத்தை மேலும் 2 மாதங்கள் நீடித்து, நாடு முழுவதும் மண்டல அளவில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். தமிழக அரசு புதிய கல்விக் கொள்கைப் பற்றி சட்டப் பேரவையில் விரிவான விவாதம் நடத்தி, இதில் மாநில அரசின் நிலைப்பாடு மற்றும் எதிர்க் கட்சிகளின் கருத்துகள் குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும்,  வரும் ஆகஸ்ட் மாதம் 10, 11- ஆம் தேதிகளில் மாநில அளவிலான இலக்கிய பயிலரங்கை மன்னார்குடியில் நடத்துவது. விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் நடைபெறும் பெருமன்றத்தின் மாநில மாநாட்டில் கலந்துகொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக பெருமன்றத்தின் மாநில பொதுச் செயலர் பேராசிரியர் இரா. காமராசு கலந்துகொண்டார். மாவட்டச் செயலர் ம. சந்திரசேகர், கிளைச் செயலர் அ. முரளி, ஏஐடியுசி செயலர் வி. கலைச்செல்வன், எழுத்தாளர்கள் வள்ளலார்தாசன், அமிர்தஜெயம், இளைஞர் பெருமன்ற நகரச் செயலர் சிவ.ரஞ்சித் உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com