அனைவருக்கும் புயல் நிவாரணம் வழங்கக் கோரிக்கை

கஜா புயலால் பாதிக்கப்பட்டு, நிவாரணம் வழங்காமல் விடுபட்டுள்ள கூரை வீடு, ஓட்டு வீடு மற்றும்

கஜா புயலால் பாதிக்கப்பட்டு, நிவாரணம் வழங்காமல் விடுபட்டுள்ள கூரை வீடு, ஓட்டு வீடு மற்றும் தொகுப்பு வீடுகளுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலச் செயலர் அ.பாஸ்கர் வெளியிட்ட அறிக்கை:
திருவாரூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக கஜா புயல் அழித்துச் சுருட்டி சென்றது. தமிழக அரசு பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரணம் வழங்கியது. ஆனால் நிவாரணப் பணி முற்றிலும் நிறைவு பெறாமல், பல்வேறு கூரை வீடு, ஓட்டு வீடு மற்றும் தொகுப்பு வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்படாமல் விடுபட்டு விட்டது.  நிவாரணம் கிடைக்காத பயனாளிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு சென்று மனு கொடுத்து வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பயனாளிகள் பட்டியலில், பெயர் இருந்தும் பயனாளியின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படாமல், தினமும் வங்கிக்கும், வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் மக்கள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
   விடுபட்டவர்களுக்கும் நிவாரணம் வழங்கக் கோரி, பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். புயலால் அடிபட்டு இறந்தவர்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் இதுநாள் வரை நிவாரணம் கிடைக்க வில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை வருவாய்த்துறை அளிக்காததால், மக்கள் மனுக்களோடு தினசரி அலைகின்றனர். 
   கஜா புயலால் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை இழந்தவர்களுக்கும், தென்னை மரத்தை இழந்தவர்களுக்கு மரத்துக்கு ரூ.1,100 வீதம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் யாருக்கும் முழுமையாக நிவாரணம் கிடைக்கவில்லை. அதுபோலவே பலன் தரும் மரங்களை இழந்தவர்களுக்கும் நிவாரணம் கிடைக்கவில்லை. நிவாரணப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
    வருவாய்த் துறையில் பணியாற்றிய பணியாளர்களை வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்வதால், தொடர்ந்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலனை செய்து நிறைவேற்றுவதுடன் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com