திருவாரூர் ஆழித்தேரோட்டம்: பேருந்து வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்ட விழாவை காண வரும் பொதுமக்களுக்கு பேருந்து வசதி செய்துதர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்ட விழாவை காண வரும் பொதுமக்களுக்கு பேருந்து வசதி செய்துதர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புகழ் பெற்ற திருவாரூர் ஆழித்தேர் பெருவிழா ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. சிறப்புமிக்க இந்த ஆழித்தேர் திருவிழாவை காண தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலிருந்தும் திரளானோர் பங்கேற்பர். கடந்த சில ஆண்டுகளாக மயிலாடுதுறை மார்க்கத்திலிருந்து வரும் பேருந்துகள் திருவாரூருக்கு 6 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கங்களாஞ்சேரி என்ற ஊரிலிருந்து வழிமாற்றி மத்தியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள நீலக்குடி வழியாக கும்பகோணம் செல்லும் சாலைக்கு சென்று அங்கிருந்து திருவாரூர் கும்பகோணம் சாலை மார்க்கமாக திருவாரூர் பேருந்து நிலையத்தை அடையும் வகையில் மாற்றி விட்டு வருகின்றனர். இவ்வாறு வழக்கமான பேருந்து செல்லும் வழியைவிட்டு வேறு வழியில் பேருந்துகளை மாற்றி விடுவதன் காரணத்தினால் கங்களாஞ்சேரி, வண்டாம்பாளை, பெரும்புகளூர், வடகால், திருப்பள்ளிமுக்கூடல், சேந்தமங்கலம், கீழக்காவலக்குடி போன்ற இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த, விவசாயம் செய்கின்ற ஏழை விவசாய பொதுமக்கள் பேருந்து வசதியின்றி மிகுந்த சிரமத்துக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. 
தேர்த் திருவிழாவை காண்பதற்காக 6 கிலோ மீட்டர் தூரம் கால்நடையாகவோ அல்லது ரூ. 200 முதல் ரூ. 300 வரை செலவு செய்து ஆட்டோவில் வந்து செல்கின்றனர். பொதுமக்களை சிரமப்படுத்தும் இந்த செயலை என்ன காரணத்தினாலோ மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மயிலாடுதுறை மார்க்கத்திலிருந்து வரும்  பேருந்துகள், திருவாரூர் நகர எல்லைக்குள் நுழைந்து புதுத்தெரு பகுதியில் உள்ள நியூ பாரத் பள்ளி வரை இயக்கப்பட்டு வந்தது. எனவே, நிகழாண்டிலிருந்து தேர்த் திருவிழா நாளில் மயிலாடுதுறை மார்க்கத்திலிருந்து வரும் பேருந்துகளை திருவாரூர் புதுத் தெருவில் உள்ள நியூ பாரத் பள்ளி வரை இயக்க வேண்டும் என கங்களாஞ்சேரி, வண்டாம்பாளை, சேந்தமங்கலம், ஈ.பி.காலனி, கீழக்காவதுகுடி பொது மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கும் வகையில் பேருந்துகளை நியூ பாரத் பள்ளி வரை இயக்க வேண்டும். 
மேலும் மயிலாடுதுறை மார்க்கத்திலிருந்து திருவாரூர் வழியாக மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி செல்லும் பேருந்துகளை தைக்கால் திடல், செங்கம் தியேட்டர், அய்யனார் கோயில் தெரு, நேதாஜி சாலை வழியாக பேருந்து நிலையம் வரை இயக்க வேண்டும். இதே வழியில்தான் முன்பெல்லாம் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. எனவே, இதற்காக இப்பகுதிகளில் உள்ள சாலைகளை உடனடியாக அகலப்படுத்த வேண்டும். தைக்கால் தெரு முதல் மயிலாடுதுறை சாலை வரை விரைவில் சாலைப் பணியை தொடங்கி முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com