மக்களவைத் தேர்தல் அமைதியாக நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

மக்களவைத் தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டப் பேரவை இடைத்தேர்தல் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெற அனைத்து அலுவலர்களும்


மக்களவைத் தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டப் பேரவை இடைத்தேர்தல் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெற அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த.ஆனந்த் அறிவுறுத்தினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்களவைத் தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக மண்டல அளவிலான தேர்தல் அலுவலர்களுக்கும், காவல்துறையினருக்கும், சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்புக்கு தலைமை வகித்து அவர் தெரிவித்தது:
மக்களவைத் தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டப் பேரவை இடைத் தேர்தல், ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் விளம்பரங்களைக் கண்காணிக்கும் விதமாக ஊடக மையம் மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு, அனைத்து உள்ளூர் தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களைப் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு 25 மண்டல அலுவலர்களும், மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்கு 25 மண்டல அலுவலர்களும், திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு 23 மண்டல அலுவலர்களும், நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு 27 மண்டல அலுவலர்களும் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தலில் மண்டல அளவிலான அலுவலர்கள் மற்றும் காவல் துறையினரின் பங்கு மிக முக்கியமானது. மண்டல அளவிலான அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியைப் பார்வையிட்டு குடிநீர், கழிவறை, மின்சாரம், மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு ஏதுவாக சாய்தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்குச்சாவடி அருகில் அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்களது விளம்பரங்கள், அவர்களைச் சார்ந்த எந்தவொரு விளம்பரத்தட்டிகள் இல்லாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வாக்குச்சாவடிக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தளவாடப் பொருள்கள் முறையாக எடுத்துச்செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்களவைத் தேர்தல், திருவாரூர் சட்டப் பேரவை இடைத்தேர்தல் ஆகியவை அமைதியாகவும், சுமுகமாகவும் நடத்தி முடிக்க அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு  வழங்க வேண்டும் என்றார் அவர்.
பயிற்சி வகுப்பில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம். துரை, மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) உமா மகேஸ்வரி, தேசிய தகவல் மையம் தொழில்நுட்ப இயக்குநர் எஸ்.ரவிச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து
கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com