திமுகவின் தேர்தல் அறிக்கை பாராட்டத்தக்கது

மக்களவைத் தேர்தலையொட்டிய திமுகவின் தேர்தல் அறிக்கை பாராட்டத்தக்கது. மக்களின் தேவைகளை

மக்களவைத் தேர்தலையொட்டிய திமுகவின் தேர்தல் அறிக்கை பாராட்டத்தக்கது. மக்களின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்ற வகையில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் கூறினார். 
திருவாரூரில் புதன்கிழமை, நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். செல்வராசு, திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கே. கலைவாணன் ஆகியோரை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிமுகப்படுத்தி பேசினார். இக்கூட்டத்தில் இரா. முத்தரசன் பேசியது: மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கியமான தேர்தல். 
மோடி ஆட்சிக்கும், எடப்பாடி ஆட்சிக்கும் விடை கொடுக்கும் தேர்தல். கருணாநிதி இருக்கும்போது, அனைத்து தோழமைக் கட்சியினரையும் மதித்து அன்பாக அரவணைத்து இடங்கள் ஒதுக்குவாரோ, அதேபோல் தற்போதைய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்து தொகுதிகளையும் ஒதுக்கியுள்ளார். எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் சுமூகமாக இடங்கள் ஒதுக்கப்பட்டன.  
இந்த கணக்கை பார்த்தால், தன்னோடு இணைந்து மக்கள் பிரச்னைகளில் பங்கேற்ற தோழமைக் கட்சிகளுக்கு சரிபாதி தொகுதிகளை வழங்கியுள்ளது. அனைத்துத் தொகுதிகளையும் திமுக தலைவரே அறிவித்தார். பின்னர் 2 தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டு, தேர்தல் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கை முழுக்க, முழுக்க யதார்த்தமான பாராட்டத்தக்க அறிக்கை. மக்களின் உணர்வுகளை புரிந்து, மக்களின் தேவைகளை உணர்ந்து அதற்கு ஏற்ற வகையில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சட்டப் பேரவை தொகுதிகளுக்கான அறிக்கையும், என்ன செய்யப்போகிறோம் என்றும் உள்ளது. திமுக தலைமையிலான அறிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மனப்பூர்வமாக வரவேற்கிறது.
நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு ரத்து செய்யக் கோரி 2 மசோதாக்களை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்தன. ஆனால், இந்த மசோதாக்கள் தில்லிக்கு வரவில்லை என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். எந்த தமிழ்நாட்டு அமைச்சரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.
ஒரு மாநிலத்துக்காக நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இதன்பிறகு அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்டார். எனவே, அவரின் சாவுக்கு தற்போதைய தமிழக அரசே காரணம். எனவே, இந்த தேர்தலில், அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்த வெற்றியை கருணாநிதிக்கு சமர்ப்பிப்போம்  என்றார் முத்தரசன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com