மார்ச் 24-இல் வலங்கைமானில் பாடைக் காவடித் திருவிழா

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் மார்ச் 24-ஆம் தேதி பாடைக் காவடித் திருவிழா நடைபெறவுள்ளது.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் மார்ச் 24-ஆம் தேதி பாடைக் காவடித் திருவிழா நடைபெறவுள்ளது.
வலங்கைமானில் உள்ள புகழ்பெற்ற சீதளாதேவி மாரியம்மன்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனிப் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். விழாவையொட்டி, மார்ச் 8-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், மார்ச் 10-ஆம் தேதி காப்புக் கட்டுதலும், மார்ச் 17-ஆம் தேதி முதல் திருவிழா தொடங்கி நடை பெற்று வருகிறது. விழாவையொட்டி, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு வருகிறது. இரவு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருவதுடன், சிறப்பு அலங்காரத்தில் விசேஷ வாகனத்தில் அம்மன் வீதியுலாவும் நடைபெற்று வருகிறது. பங்குனிப் பெருந்திருவிழாவின் 8-ஆம் நாள் திருவிழா பாடைக் காவடித் திருவிழாவாகும். இவ்விழா மார்ச் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.
பாடைக் காவடி விழாவின் சிறப்பு: கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தநோயிலிருந்து குணமடைய இக்கோயில் அம்மனிடம் வேண்டிக்கொண்டு, நோய் குணமடைந்தவுடன் பாடைக் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். அதாவது நோயிலிருந்து குணமடைந்தவர்களை புனித நீராடச் செய்து நெற்றியில் திருநீரு பூசி பச்சைப் பாடையில் படுக்க வைத்து கிராமிய வாத்தியங்கள் முழங்க 4 பேர் பாடையை சுமந்து வர ஒருவர் முன்னால் தீச்சட்டியை சுமந்து செல்ல வலங்கைமான் நகர முக்கிய வீதிகள் வழியாக பாடைக் காவடி வலம் வந்து கோயிலை மூன்று முறை சுற்றிய பிறகு கொடிமரம் முன்பு பாடைக் காவடியை இறக்கி வைப்பார்கள். பூசாரி பாடைக் காவடியில் படுத்திருப்பவருக்கு நெற்றியில் திரு நீரு பூசி எழச் செய்வார். அவரவர்கள் குல வழக்கப்படி பாடைக் காவடி எடுப்பார்கள். குழந்தைகள் தொட்டில் காவடியில் சுமந்து வரப்படுவார்கள். பால்காவடி, பால்குடம், செடில் காவடி போன்ற பல்வேறு காவடிகளை எடுத்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்துவர். 
மார்ச் 24-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இவ்விழாவில் ஆயிரக்கணக்கானோர் காவடிகளை எடுத்து தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தவுள்ளனர். விழாவையொட்டி, வலங்கைமானில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் நலன் கருதி அரசின் பல்வேறு துறையினரும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com