காவல் உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு
By DIN | Published On : 06th May 2019 01:08 AM | Last Updated : 06th May 2019 01:08 AM | அ+அ அ- |

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே குடிபோதையில் தகராறு செய்தவரை பிடித்து வந்தபோது, காவல் உதவி ஆய்வாளர் மீது அரிவாள் வெட்டு விழுந்தது.
சாலக்கடை தலைக்காடு பகுதியில் 5-க்கும் மேற்பட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களைத் தாக்கி தகராறு செய்துள்ளனர். அப்போது, முன்னாள் பாஜக மாவட்டச் செயலாளர் கணேசன் மகன் பிரகாஷ் (24) வந்துள்ளார். அவரது இருகக்கர வாகனத்தையும் அக்கும்பல் மறித்து அடித்து நொறுக்கியுள்ளது.
இதையறிந்து வந்த திருத்துறைப்பூண்டி காவல் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், தகராறில் ஈடுபட்ட தலைக்காடு பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (24) என்பவரை கைது செய்தார். பின்னர், இருசக்கர வாகனத்தில் சுபாஷ் சந்திரபோஸ், மற்றொரு காவல் உதவி ஆய்வாளர் சிவகுமார் ஆகியோரை அழைத்துச் சென்றபோது, முன்னாள் பாஜக மாவட்டச் செயலாளர் கணேசன் அங்கு வந்துள்ளார். மேலும், போலீஸாரின் இருசக்கர வாகனத்தை நிறுத்திய அவர், தனது மகனை அடித்த சுபாஷ் சந்திரபோûஸ அரிவாளால் வெட்ட முயன்றாராம்.
எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்த்திருந்த காவல் உதவி ஆய்வாளர் சிவகுமாரின் வலது கையில் வெட்டு விழுந்தது. இதைத்தொடர்ந்து, திருவாருர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காவல்துணைக் கண்காணிப்பாளர் பொன் கார்த்திக்குமார், ஆய்வாளர் அன்பழகன் ஆகியோர் நிகழ்விடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.